இத்தாலியில் ஒரே நாளில் 133 பேர் கொரானாவுக்கு பலி
சீனாவில் கொரானா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இத்தாலியில் உயிரிழப்பு அதிகரித்து வருவதால், அந்நாட்டின் ஒன்றரைக் கோடி மக்கள் வேறு இடங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 3 ஆயிரத்து 827 பேரின் உயிரைக் குடித்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் உயிரிழப்பு குறைந்து வருகிறது. ஆனால், உலகின் 105 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இத்தாலியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 133 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொத்துக் கொத்தான மரணங்களால் நிலைகுலைந்து போன அந்நாட்டு அரசு நாடு முழுவதும் உள்ள இரவு விடுதிகள், திரையரங்கங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இத்தாலியின் பிறபகுதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் வடபகுதியில் உள்ள லோம்பார்டி பிராந்தியம் மற்றும் அருகாமையில் உள்ள 15 மாகாணங்களை சேர்ந்த சுமார் ஒரு கோடியே 60 லட்சம் மக்கள் வரும் ஏப்ரல் மாதம் 3ம் தேதிவரை தங்களது வசிப்பிடங்களில் இருந்து வேறு இடங்களுக்கு செல்ல கூடாது என இத்தாலி பிரதமர் கியூசெப்பே கோன்ட்டே உத்தரவு பிறப்பித்துள்ளார். வேறு நாடுகளுக்குச் சென்று வரும் விமானங்கள் இயக்கப்படாததால் விமான நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
அலுவலர்களும், பயணிகளும் வராத காரணத்தினால் அரசு அலுவலகங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் ஆள் அரவமின்றி காணப்படுகின்றன. ((7015)) இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக சிறைக் கைதிகளை அவர்களின் உறவினர் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டிருந்து. இந்தத் தடையை நீக்கக் கோரி மோடனா நகரில் உள்ள சிறையில் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் நிகழ்விடத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். சிறையின் வெளியே கைதிகளின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments