கொலைகார கொரானாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3800 ஐக் கடந்தது

0 2195

உலகையே அதிரவைக்கும் கொரோனா கிருமியின் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827 ஆக உள்ள நிலையில் சீனாவில் நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் அதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது. ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 976 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 ஆயிரத்து 129 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சீனாவில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. நேற்றைய கணக்கின்படி அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால் அதற்கு அடுத்த இடத்தில் உள்ள இத்தாலியில் பலியானவர்களின் எண்ணிக்கை 366 ஆக உள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 133 பேர் மரணித்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதேபோல் ஈரானிலும் 194 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் ஒரே நாளில் 49 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக தொற்றி வருகிறது. கடற்கரை மாகாணமான ஒரேகான் உள்ளிட்ட 8 மாகாணங்களில் சுகாதார அவசர நிலையை அந்தந்த மாகாண ஆளுநர்கள் பிறப்பித்துள்ளனர். அண்டாரியோ மற்றும் ஆல்பெர்ட்டா பகுதிகளில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கனெக்டிகட் மற்றும் மெம்பஸ் பகுதியில் புதிதாக நோயின் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் தங்கள் நாட்டு ராணுவத்தினரோ அவர்களின் குடும்பத்தினரோ இத்தாலி மற்றும் தென் கொரியாவுக்குச் செல்லவேண்டாம் என அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தத்தில் அமெரிக்காவில் மட்டும் 22 பேர் உயிரிழந்த நிலையில், 538 பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

ஜெர்மனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கொரோனா பாதிப்பால் எகிப்தில் உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது. நோயின் தீவிரத் தாக்கம் எதிரொலியாக நார்வே உடனான ராணுவ ஒத்திகையை ஃபின்லாந்து ரத்து செய்துள்ளது.

மேலும் வாடிகன் தனது அருங்காட்சியகத்தை மூடி உள்ளது. இதேபோல் போலந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பாதிப்பு வேகமாக உயர்ந்து வருவது அந்நாட்டு அரசுகளையும், மக்களையும் கவலை கொள்ளச் செய்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments