ஆள்மாறாட்டம் மூலம் நிலமோசடி.. போலீசில் சிக்கிய ஏசி மெக்கானிக்..!
வெளியூர், வெளிநாட்டில் இருந்துகொண்டு சென்னை புறநகரில் நிலம் வாங்கிப் போடுபவர்களின் விவரங்களைக் கண்டறிந்து போலி ஆட்கள் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் அந்த நிலங்களை அபகரித்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் வசித்து வரும் சரஸ்வதி என்பவர் திருநீர்மலையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் நிலம் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த நிலத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு யாரோ முறைகேடாக விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இதேபோல பெங்களூரைச் சேர்ந்த சுனிஜித் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பல்லாவரத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் நிலம் வாங்கியுள்ளார்.
இவருடைய நிலத்தையும் யாரோ, கடந்த 2010ஆம் ஆண்டில் மோசடி செய்து விற்றது தெரியவந்துள்ளது. சுனிஜித் கிருஷ்ணமூர்த்தியும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அடுத்தடுத்து சென்னை புறநகர் பகுதியில் உள்ள நிலங்கள் மோசடி செய்து விற்கப்பட்டதாக புகார் வந்ததையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சரஸ்வதி மற்றும் சுனிஜித் கிருஷ்ணமூர்த்தியை போன்று ஆள்மாறாட்டம் செய்ய வைத்து போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தது விற்பனை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்ததது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர்தான் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டுள்ளார் என்பதை கண்டுபிடித்து, மத்திய குற்றப்பிரிவினர் கைது செய்தனர். நிலத்தின் உரிமையாளர்கள் போன்று ஆள்மாறாட்டம் செய்த நபர்களும் தலைமறைவாக உள்ளனர்.
இந்த கும்பல் சென்னை புறநகர் பகுதியில் நிலம் வாங்கி வைத்திருக்கும் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் யார் யார் என்பதை கண்டறிந்து, அவர்களைப் போல ஒருவரை ஆள்மாறாட்டம் செய்ய வைத்து நிலத்தை விற்பனை செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத சுரேஷ், ஏசி மெக்கானிக்காக வேலை செய்து கொண்டே, பல கோடி ரூபாய் மோசடி செய்து பெற்ற பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட சுரேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
சுரேஷின் கூட்டாளிகளை கண்டுபிடிக்கவும், எத்தனை நிலங்களை மோசடி செய்து அவர் விற்பனை செய்துள்ளார், இதற்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் யார், யார் என்பதை கண்டுபிடிக்கவும் ,சுரேஷை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Comments