DHFL பண மோசடி வழக்கில் கைதான எஸ் பேங்க் ராணா கபூரிடம் விசாரணை
பண மோசடி வழக்கில் எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரைக் கைது செய்த அமலாக்கத்துறையினர் அவரை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
டிஎச்எப்எல் நிறுவனம் பல்வேறு வங்கிகளில் 13ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றுப் போலியான 79 நிறுவனங்களுக்கு அந்தப் பணத்தைக் கடன்கொடுத்ததாகக் கூறி மோசடி செய்துள்ளது. டிஎச்எப்எல் நிறுவனத்தின் மொத்தக் கடனில் நாலாயிரத்து 450 கோடி ரூபாய் ராணா கபூரின் எஸ் பேங்கில் பெற்றதாகும். இந்தக் கடன் திரும்பச் செலுத்தப்படாமல் வாராக்கடனாக உள்ளது.
இதற்குக் கைம்மாறாக ராணா கபூரும், அவரின் மகள்கள் இருவரும் இயக்குநர்களாக உள்ள டூயிட் அர்பன் வெஞ்சர்ஸ் எனப்படும் நிறுவனத்தில் டிஎச்எப்எல் 600 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இந்தப் பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில் வெள்ளி மாலை மும்பை ஒர்லியில் உள்ள ராணா கபூரின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது.
வெள்ளி இரவில் ராணாகபூரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், சனிக்கிழமை தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர்.
அங்குப் பகலிரவாக விசாரணை தொடர்ந்தது. இன்று அதிகாலை 3 மணிக்கு அவரைக் கைது செய்தனர். அதன்பின் அவருக்கு செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. அதன்பின் அவரை ஆஜர்படுத்துவதற்காக நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்றனர்.
மேலும் டெபிட் அட்டை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என எஸ் பேங்க் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடிக்குள்ளான எஸ் பேங்கை மறுசீரமைக்கும் திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி எஸ் பேங்கின் 49 விழுக்காடு பங்குகளை ஸ்டேட் வங்கி வாங்க உள்ளது.
இந்நிலையில் எஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், வைப்புத்தொகை பாதுகாப்பாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அரசும் ரிசர்வ் வங்கியும் வாடிக்கையாளர்களின் பணத்துக்கு உத்தரவாதம் அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், வங்கி விரைவில் மறுசீரமைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ள ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை எஸ் பேங்க் ஏடிஎம்களிலும் பிற வங்கிகளின் ஏடிஎம்களிலும் எடுத்துக்கொள்ளலாம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.
Comments