தலைக்கவசம் உயிர்க்கவசம் - பெண் காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு

0 890

மதுரை அருகே ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று உயிரிழந்த இளைஞரின் உடலை சுட்டிக்காட்டி, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து, பெண் காவல் ஆய்வாளர் அதிரடி விழிப்புணர்வில் ஈடுபட்டார். 

மதுரை திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் பிரதான சாலையில் உள்ள  தனியார் கல்லூரியில் அர்பித்சிங் என்ற மாணவன் படித்து வந்தார். நேற்று அவரும் அவரது நண்பர் சஞ்சு ஜி.சங்கா என்பவரும் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக சென்றுள்ளனர். அப்போது அந்த வாகனம் சாலையோர தடுப்பு மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அர்பித்சிங் சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மற்றொரு மாணவன் சங்கா படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த திருப்பரங்குன்றம் காவல்நிலைய பெண் காவல் ஆய்வாளர் மதனக்கலா, உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டார்.

மேலும், அந்த உடல் மீட்கப்படும் வரையில், ஹெல்மெட் அணிவது எவ்வளவு அவசியம் என, அந்த வழியாக, ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம், உயிரிழந்த இளைஞர் நிலையை சுட்டிக்காட்டி விழிப்புணர்வில் ஈடுபட்டார்.

பெண் காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு நடைமுறை அதிரடியாக இருந்தாலும், ஹெல்மெட் அணியாமல் விலைமதிப்பற்ற உயிரை விட்ட இளைஞரின் உடலைக் கண்டு, ஹெல்மெட் அணியாது பைக்கில் சென்றவர்கள், அது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தனர்.

முதலில், தவறு போல் தோன்றினாலும், பெண் காவல் ஆய்வாளரின் விழிப்புணர்வு முயற்சியை, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments