கொரானா வைரஸ் பாதிப்பு : அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்....
கொரானா வைரஸ் பீதி காரணமாக அமெரிக்காவின் நியுயார்க் மாகாணத்தில், அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரானாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உலகளவில், 3500ஐ தாண்டியுள்ளது.
சீனாவின் வூகான் நகரில் தோன்றி அக்கம் பக்கம் பரவிய கொரானா தொற்று, உலகம் முழுவதும் 90க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவி உள்ளது. 3500க்கும் அதிகமானோர் பலியான நிலையில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகம் முழுவதும் ஹாலிவுட் திரைப்படங்களின் வசூல் முதல் விமானப் போக்குவரத்து வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பன்னாட்டு வர்த்தகம் அனைத்தையும் தலைகீழாகக் கவிழ்த்து விட்டது கொரானோ.
சுமார் 10 லட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சனிக்கிழமை சீனாவில் 28 புதிய மரணங்கள் பதிவாகியுள்ளன. தினமும் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு கொண்டு வரப்படுகின்றனர். சீனாவை அடுத்து இத்தாலியில் 200 பேர் உயிரிழந்த நிலையில் அங்கு 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நியுயார்க்கில் கொரோனாவால் 89 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து நியுயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ எம். கியூமோ அவசர நிலையை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில், 29 மாகாணங்களுக்கு பரவியிருக்கும் கொரானாவால், சுமார் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகப்பட்சமாக, அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மாகாணமான வாஷிங்டனில் மட்டும் 16 பேர் பலியாகியுள்ளனர்.
ஈரானில் கொரானா வைரஸுக்கு புதிதாக 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் புதிதாக 743 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக பலியான 49 பேரையும் சேர்த்து, ஈரானில் கொரானாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 194ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 6566ஆக அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களும் அடுத்த உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
Comments