பேராசிரியர் அன்பழகன் உடல் தகனம்..!
மறைந்த திமுக பொது செயலாளர் க.அன்பழகனின் உடல், அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது.
கடந்த பிப்ரவரி 24ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 98 வயதான பேராசிரியர் க.அன்பழகனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆயினும் சிகிச்சை பலனளிக்காமல் அதிகாலை ஒரு மணியளவில் அன்பழகன் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கண்ணாடிப் பேழையில் வைத்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக மூத்த தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து கீழ்ப்பாக்கம் வீட்டிலிருந்து வேலாங்காட்டிலுள்ள மின்மயானத்துக்கு அலங்கரிக்கப்பட்ட வண்டியில் வைத்து அன்பழகனின் உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் வேலாங்காடு மின்மயானத்தில் மாலை சுமார் 5.50 மணியளவில் அன்பழகனின் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்கலங்கியபடி தங்களது இறுதி அஞ்சலியை அன்பழகனின் உடலுக்கு செலுத்தினர்.
Comments