Yes Bank மறுசீரமைப்புத் திட்டம்..!
எஸ் பேங்கின் 49 விழுக்காடு பங்குகளை வாங்கும் திட்டத்துக்கு பாரத ஸ்டேட் வங்கியின் இயக்குநரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அதன் தலைவர் ரஜ்னீஸ் குமார் தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு எஸ் பேங்கின் நிதி நிலை வலுவிழந்து வருவதை அறிந்த ரிசர்வ் வங்கி, மேலாண் இயக்குநர் பதவியில் இருந்து அதன் நிறுவனரான ராணா கபூரை நீக்கியது.
இந்நிலையில்,எஸ் பேங்க் சீர்குலைவுக்கு அதன் தலைமையின் முறைகேடுகள் தான் காரணம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். எஸ் பேங்கின் இயக்குநர் குழுவை ஒரு மாதக் காலத்துக்கு முடக்கி வைத்துள்ள ரிசர்வ் வங்கி, அதன் புதிய நிர்வாகியாக பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை நிதி அதிகாரியான பிரசாந்த் குமாரை நியமித்தது. எஸ் பேங்கில் கணக்கு வைத்திருப்போர் ஒரு மாதக் காலத்தில் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கலாம் என வரம்பும் நிர்ணயித்தது.
எஸ் பேங்கின் மறுசீரமைப்புக்கான திட்டத்தின்படி அதன் 49 விழுக்காடு பங்குகளைப் பாரத ஸ்டேட் வங்கி வாங்கிக் கொள்ளும் எனக் குறிப்பிட்டது. இதையடுத்து, எஸ் பேங்க் நிறுவனரான ராணா கபூரின் மும்பை வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். நிதி மோசடி தொடர்பாக ராணா கபூர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையடுத்து இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜ்னீஸ் குமார், இன்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எஸ் பேங்கின் 49 விழுக்காடு பங்குகளை வாங்கும் திட்டத்துக்கு ஸ்டேட் வங்கியின் இயக்குநரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், இது குறித்துப் பங்குச்சந்தைக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். பங்குகளைக் கைம்மாற்றும் நடவடிக்கை குறித்து வங்கியின் சட்ட வல்லுநர்கள் குழு ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எஸ் பேங்கில் பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் பணம் 545 கோடி ரூபாய் வைப்புத் தொகையாக உள்ளது பற்றிப் பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எஸ் பேங்கில் கணக்கு வைத்திருப்போர் ஒரு மாதத்தில் 50 ஆயிரம் ரூபாய் வரை தான் எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி வரம்பு வைத்துள்ளது.
இதனால் ஜெகன்நாதர் கோவில் பணத்தையும் எடுக்க முடியாமல் போகுமோ என பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள ஒடிசா மாநிலச் சட்டத்துறை அமைச்சர் பிரதாப் ஜெனா, ஜெகன்நாதர் கோவில் பணம் சேமிப்புக் கணக்கில் இல்லை என்றும், அது பிக்ஸ்டு டெபாசிட்டாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைவைப்பு இந்த மாத இறுதியில் முதிர்ச்சியடைவது குறித்து ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்துள்ளதாகவும், அதனால் அந்தத் தொகையை வேறு வங்கிக்கு மாற்றுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது எனவும் பிரதாப் ஜெனா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரை தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், டிஎச்எப்எல் நிறுவனத்துக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் கொடுத்தது, அதற்குப் பதிலாக அவர்களிடம் இருந்து ஆதாயம் பெற்றது ஆகியவை குறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள ராணா கபூரின் மூன்று மகள்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments