ஜம்மு-காஷ்மீரில் 2 பேருக்கு கொரோனா தொற்று சந்தேகம்

0 1866

இந்தியாவில் கொரானா வைரஸ் உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் புதிதாக 2 பேர் கொரானா இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் உகான் பகுதியில் தோன்றிய கொரானா வைரஸ், இந்தியாவிலும் பரவி இதுவரை 31 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர்த்து, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கு கொரானா வைரஸ் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து 2 பேரின் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த 2 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கையாக பயோமெட்ரிக் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 2 மாவட்டங்களிலுள்ள பள்ளிகள் அனைத்தும் 31ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் கொரானா வைரஸ் பாதிப்புக்கு ஆளான அமெரிக்க பயணியுடன் 127 பேர் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களை தனிமையில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரானா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகும் 1500 பேரை தனிமையில் கண்காணிக்கும் மையங்களை இந்திய ராணுவம் அமைத்து தரவுள்ளது. ஜெய்சால்மர், சூரத்கர், செகந்திராபாத், சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரானா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஈரானில் இருக்கும் இந்தியர்கள் 300 பேரிடம் சேகரிக்கப்பட்ட சளி, ரத்த மாதிரிகள் டெல்லிக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனையில் கொரானா இல்லை என உறுதியானால், 300 பேரும் இந்தியா அனுப்பி வைக்கப்படுவர் என கூறப்படுகிறது.

கொரானா வைரஸ் அச்சம் காரணமாக கேரள மாநிலம் கொல்லத்திலுள்ள ஆசிரமத்தில் தமது ஆதரவாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை மாதா அமிர்தானந்த மயி நிறுத்தி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்பேரில் அந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், சுகாதாரத் துறையின் அனுமதி கிடைத்த பிறகே, அந்நிகழ்ச்சி இனி நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் 2 பேருக்கு கொரானா வைரஸ் உறுதியாகியுள்ளது. இத்தாலியிலிருந்து கடந்த 3ம் தேதி வந்த 2 பேருக்கும் கொரானா அறிகுறி இருந்ததால் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து 2 பேரிடம் இருந்தும் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரி, டெல்லிக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 2 பேருக்கும் கொரானா வைரஸ் பாதிப்பிருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கொரானா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments