பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான, பேராசிரியர் க. அன்பழகன் மறைவுச் செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாகத் தெரிவித்துள்ளார். இளம் வயதிலேயே அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டு, கலைஞர் கருணாநிதியின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும், திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகாத உறுதி மிக்க மூத்த அரசியல்வாதியாகவும் விளங்கியவர் அன்பழகன் என முதலமைச்சர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
43 ஆண்டுகளாக தி.மு.க. பொதுச் செயலாளராகவும், அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியலில் தடம் பதித்து ஆசிரியர், மேடை பேச்சாளர், எழுத்தாளர், தொழிற்சங்கவாதி, சமூக சீர்திருத்தவாதி போன்ற பல பரிமாணங்களுடன் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தியவர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பேராசிரியர் க. அன்பழகன் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தி.மு.க.வினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
Comments