பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல்

0 2113

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசியர் அன்பழகன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தமிழகத்தின் முதுபெரும் தலைவரும், திராவிட சிந்தனையின் தெளிவுரையும், ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவருமான பேராசிரியர் அன்பழகனின் இழப்பு வேதனைக்குரியது என்று தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா வளர்த்த வளர்ப்புகளில் மற்றொரு வளர்ப்பை திராவிட இயக்கம் இழந்திருப்பதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்டத் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் பேராசிரியர் என்று தெரிவித்துள்ள அவர், மாபெரும் தலைவரின் இழப்பு தி.மு.க.வுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும், உலக தமிழர்களுக்கும் பேரிழப்பு என்று கூறியுள்ளார். 

பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து, தமிழ் இனத்திற்கான பேராசிரியராக அவர் மறைந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் இல்லத்திற்கு சென்று நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், பேராசிரியரின் மறைவு மிகப்பெரிய இழப்பு என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுகவிற்கான தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க. சார்பில் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பேராசிரியர் அன்பழகன் திராவிட இயக்கக் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர் என்றும், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற முன்னோடித் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பும், நட்பும் கொண்டிருந்தவர் என்றும் தெரிவித்துள்ளனர். 

மக்களாட்சியின் அனைத்து நிலைகளிலும் பங்கு பெற்று பணியாற்றிய சிறப்புக்குரியவர் என்றும், அவர் அமைச்சராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றியபோது அவரது தமிழ்ப்புலமை, பெருந்தன்மையான உரைகள், கொள்கை மாறாத நட்புறவு, வியப்புக்குரிய உழைப்பை கண்டு வியந்திருப்பதாகவும் கூறியுள்ளனர். பேராசிரியர் அன்பழகனின் மறைவு தமிழக அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

மிக மூத்த தலைவரான பேராசிரியர் அன்பழகன் பல்வேறு நூல்களை எழுதியவர் என்றும் திராவிட இயக்கத்தில் உறுதியான பிடிப்புள்ளவர் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். 70 ஆண்டுகால அரசியல் வாழ்வில் தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக அவர் ஆற்றிய பணிகள் மறக்கமுடியாதவை என்று குறிப்பிட்டுள்ள ஆளுநர், அவரது மறைவு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ.க. சார்பில் விடுக்கப்பட்டுள்ள இரங்கல் செய்தியில் பேராசிரியர் அன்பழகன் மறைவு தமிழகத்துக்கும், தமிழக அரசியலுக்கும் பெரிய இழப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வார்த்தைகளில் கண்ணியம், மென்மை, கொள்கையில் பற்று தலைவரின் நிழலாகவே வாழும் பணிவை அவரிடம் இருந்து ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments