கொரானா அறிகுறி... சுயமாக அறிவது எப்படி?
கொரானா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளை, ஒருவர், சுயமாக கண்டறிவது எப்படி என்பது பற்றிய, எளிய விளக்கங்களை, மருத்துவ உலகமும், சுகாதாரத்துறையும் வெளியிட்டிருக்கின்றன.
முதலில், கொரானா வைரஸ், கொல்லும் நோய்தொற்று, அது பீடித்தவுடன் உயிர் போய்விடும் என பயம் கொள்ள கூடாது. ஏனெனில், அந்நோய் தீவிரமடைந்து, மரணமடையும் விகிதம் என்பது, வெறும் 3 விழுக்காடு தான் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளதை, நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
காய்ச்சல், தொடர் இருமல், தும்மல், அதீத களைப்பு, இவற்றுடன், சில தருணங்களில் வாந்தி, அல்லது வயிற்றுப்போக்கு ஆகியவை இருந்தால், அது கொரானா அறிகுறியாக இருக்கலாம். இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகாமையிலுள்ள மருத்துவரை அணுக வேண்டும்.
கொரானா வைரஸ், மனிதரிடமிருந்து, மனிதருக்கு பரவுகிறது. அதாவது., கொரானா பாதித்த ஒருவரது எச்சில் அல்லது சளி மூலம், பரவ வாய்ப்பு உண்டு. இதற்காக தான், வெளியில் சென்றுவந்தால் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும், கண்கள், மூக்கு, வாய் ஆகியவற்றை அடிக்கடி தொடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
ஒருவர் கொரானா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டால், அவருக்கு ஏற்பட்டிருக்கும் காய்ச்சல், மற்றும் அதீத களைப்பு குறைக்கப்பட்டு, பூரண உடல் நலத்தை நோக்கிய சிகிச்சை முன்னெடுக்கப்படுகிறது. கொரானா பாதிப்பு அறிகுறியுடன் அனுமதிக்கப்படுவோர் பராமரிக்கப்படும் தனிமை வார்டு, நல்ல காற்றோட்டம் கொண்டதாக பரமாரிக்கப்படுகிறது.
எனவே, "வருமுன் காப்போம்" என்பதை அடிப்படையாக கொண்டு, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். முடிந்த வரை, முழங்கை வரை, கைகளை கழுவ வேண்டும். கொரானா அறிகுறி அறிந்தால், நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கைகளை கழுவதும்போது, வெறுமனே, குழாய் நீரில் நீட்டிவிட்டு எடுத்துவிடக் கூடாது. சோப் போட்டு, நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.
கொரானா அறிகுறி இருந்தால், மத்திய சுகாதார அமைச்சகத்தின் 24 மணி நேர உதவி எண்ணான, 01123978046 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாட்டில் வசிப்பவராக இருந்தால், 104 இலவச மருத்துவ சேவை எண்ணை பயன்படுத்தி தகவல் அளிக்கலாம். இதுதவிர 044-29510400, 044-29510500, அல்லது 9444340496, 8754448477 என்ற எண்களை தொடர்பு கொண்டு தகவல் தரலாம்.
உங்களை பத்திரமாக அழைத்துச் சென்று, உரிய சிகிச்சை அளித்து, மத்திய, மாநில அரசுகளின் சுகதாரத்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். எனவே, கொரானா குறித்த பீதி யாருக்கும் வேண்டாம்.
Comments