கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே பயங்கர விபத்து - தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்ளிட்ட 13 பேர் பலி

0 5425

கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே இன்று அதிகாலை 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைத் சேர்ந்த 10 பேர் உள்ளிட்ட 13 பேர் பலியாகினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சீக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர், கர்நாடக மாநிலம் தர்மஸ்தாலாவில் (dharmasthala) கோவிலுக்கு சென்றுவிட்டு காரில் ஊருக்கு இன்று அதிகாலை திரும்பினர்.

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் குனிகல் தாலுகாவிலுள்ள ஆவரைக்கல் அருகே (avaragere) பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கார் அதிகாலை 2.30 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது மறுபக்க சாலையில் எதிர்திசையில் இருந்து வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே சுமார் அரை அடிக்கும் குறைவான உயரம் கொண்ட மீடியனை கடந்து வந்து மோதியுள்ளது.

இந்த பயங்கர விபத்தில் 2 கார்களும் அப்பளம்போல நொறுங்கின. இந்த விபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த காரில் பயணித்தவர்களில் ஒரு வயது குழந்தை உள்ளிட்ட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகினர். அக்காரில் இருந்த மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். அதில் குழந்தை ஒன்று கவலைக்கிடமான நிலையில் உள்ளது.

விபத்து ஏற்படுத்திய காரில் வந்த பெங்களூரைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். விபத்து குறித்த தகவலின்பேரில் போலீஸார் சம்பவ இடம் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தோரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர். விபத்துக்கு, பெங்களூரை சேர்ந்தவர்கள் வந்த காரை ஓட்டிவந்த டிரைவர் தூங்கியதே காரணமாக கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தும்கூர் அருகே நேரிட்ட விபத்தில் பலியான கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 10 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 1 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விபத்தில் 10 பேர்  உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments