டெல்லி கலவர வழக்கு : விசாரணை தீவிரம்
டெல்லியில் நடந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ள நிலையில், 654 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் குடியுரிமைச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கிய வன்முறை, சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பரவியதில் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வன்முறை பாதித்த பகுதிகளில் உள்ள சாக்கடைகளில் இருந்தும் உடல் ஒன்று மீட்கப்பட்டது. வன்முறையில் காயமடைந்து குரு தேஜ் பகதூர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். குரு தேஜ் பகதூர், ராம் மனோகர் லோஹியா, லோக் நாயக், ஜக் பிரவேஷ் சந்திரா ஆகிய 4 மருத்துவமனைகளில் 53 பேர் உயிரிழந்ததாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் நிகழ்ந்த கலவரங்களில் ஈடுபட்ட 57 பேரை உத்தரப்பிரதேச போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். டெல்லி கலவரம் தொடர்பாக 654 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், 1820 பேர் பிடிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெல்லி கலவரம் தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில், வன்முறை கும்பல் மத்தியில் காவல்துறையினர் சிக்கி காயம் அடைந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. இதே போன்று மருத்துவமனையை கைப்பற்றிய வன்முறையாளர்கள் பால்கனியில் இருந்து சுட்டதில் ஒரு ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்த சம்பவமும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
சாந்த் பாக் பகுதியில் கலவரம் உச்சகட்டத்தில் இருந்த போது, பாதுகாப்பு பணியில் இருந்த 50 போலீசாரை ஏராளமானோர் இருபுறமும் இருந்து வேகமாக ஓடிவந்து தாக்கியுள்ளனர். நடுவில் மாட்டி கொண்ட போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வெடிக்க செய்து தப்ப முயற்சித்துள்ளனர்.
இதனால், பின்வாங்கிய கலவரக்காரர்கள் மீண்டும் வந்து போலீசாரை விரட்டி விரட்டி கம்புகளை கொண்டும், கற்களை கொண்டும் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாரிகாட் அமைக்கப்பட்ட சாலையில் இருந்து மற்றொரு சாலைக்கு ஒரு வழியாக தப்பி சென்ற போலீசார் மரங்கள் நிறைந்த பகுதியில் பாதுகாப்பாக பதுங்கினர். இந்த காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.
Comments