வடக்கில் இருந்து கொரானா ரயில் ஏறி வந்தால் ? அலர்ட் ஆவது எப்போது ?

0 21679

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் மூலம் கொரோனா வைரஸ் தமிழகத்திற்குள் நுழைந்துவிடாமல் தடுக்க சென்னை விமான நிலையத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், வட மாநிலங்களில் இருந்து சென்னை வரும் ரயில்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது...

மாத்திரை மருந்துகளுக்கு கட்டுப்படாமல் தீவிர காய்ச்சல், சளிதொல்லை, இருமல், தும்மல் போன்றவற்றுடன் மூச்சுத்திணறலும் இரு தினங்களுக்கு மேல் நீடித்தால் அந்த நபர்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியம் என்கிறது சுகாதாரத்துறை..!

இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் 3 வயது முதல் 45 வயது உள்ளோரையும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த சர்க்கரை நோயாளிகளையும், எளிதாகத் தாக்கும் தன்மை கொண்டது கொரோனா என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். விட்டமின் சி இருக்ககூடிய இஞ்சி, கொய்யாப்பழம், மஞ்சள் உள்ளிட்டவர்றை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மத்திய- மாநில சுகாதாரத் துறை தீவிரப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் தொடர் பரிசோதனை முகாம்கள் செயல்பட தொடங்கியுள்ளன. தினமும் 52 விமானங்கள் வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் நிலையில் இதுவரை 4 லட்சத்து 111 பயணிகளுக்கு சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவில் பயணிகள் வருவதால் 20 அரசு மருத்துவர்கள், 15 செவிலியர்கள் 10 மருத்துவப் பணியாளர்கள் கொண்ட குழு ஒன்று விமான நிலையத்தில் செயல்பாட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாது கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களிலும் இது போன்ற கொரோனா முன் எச்சரிக்கை சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மொத்தம் 235 படுக்கைகள் தயாராக உள்ளதாகவும் தேவைக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், முககவசங்கள்- பாதுகாப்பு ஆடைகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் தெலங்கானா, கேரளா மற்றும் வட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ள நிலையில் அப்பகுதிகளில் இருந்து தினமும் சென்னைக்கு வரும் ரெயில்களில் எந்த ஒரு தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.

5 பேர் கொண்ட சிறு மருத்துவக் குழு கூட சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பரிசோதனைக்கு நியமிக்கப்படவில்லை. மாறாக, கொரானா எச்சரிக்கை அறிவிப்பு மட்டும் ரெயில் நிலையங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது

 உயிர்க்கொல்லி வைரசான கொரோனாவின் ஆபத்தை உணர்ந்து, ரயில் நிலையங்களில் அதிகளவில் விழிப்புணர்வு அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்பதுடன், அவற்றை உள்ளூர் மொழியான தமிழில் அறிவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments