மைனர் ஜெயிலுக்கு சென்று டிக்டாக் மைனரான லவ் கிங்..! குண்டர் சட்டம் பாய்கிறது
டிக்டாக்கில் பெண்களை மயக்கி பணம் பறித்த குற்றச்சாட்டுக்குள்ளான காதல் மன்னனை நெல்லை போலீசார் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். போலீசை மிரட்டி வீடியோ பதிவிட்டு சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்றவர் நிஜ மைனரான பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
நெல்லை காவல்துறையினருக்கு ஆபாச அர்ச்சனை செய்து சவால் விட்டதால் 17 வயதிலேயே சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்ட, இந்த பாலகன் வேறுயாருமல்ல, டிக்டாக்கில் வசந்த காலபறவையாக வலம் வந்து தற்போது சிறைப் பறவையாக கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் அதே காதல் மன்னன் கண்ணன் தான் இவர்..!
டிக்டாக்கில் பல பெண்கள் கண்ணனிடம் பணத்துடன் பலவற்றையும் பறிகொடுத்த நிலையில், தென்காசி காவல் கண்காணிப்பாளரிடம் பெண்ணின் உறவினர்கள் கதறியதால், டிக்டாக்கில் ஆட்டம் போட்ட கண்ணனை சேர்ந்தமரம் போலீசார் அதிரடியாக தூக்கினர்.
விசாரணையில் 8 ஆம் வகுப்பை கூட தாண்டாத கண்ணன், கட்டிடவேலைக்கு சென்றாலும் டிப்டாப் ஆடையுடன் கல்லூரி மாணவன் என நடித்து பெண்களை காதல் வலையில் வீழ்த்தியுள்ளான்.
டிக்டாக்கில் மயங்கிய பெண்களை வாட்ஸ் அப் வீடியோ காலில் தொடர்பு கொண்டு ஆடைகளை களைய சொல்லி வீடியோவாக பதிந்து வைத்து, அதனை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு மெயிலில் அனுப்பி மிரட்டி பணம் பறித்த இவனுக்கு பின்னணியில் ஒரு கும்பல் இருப்பதாக கூறப்படுகின்றது.
அவனது மெயிலில் இருந்து ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோவை போலீசார் கைப்பற்றிய நிலையில் தங்கள் குடும்ப மானம் போய்விடும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையினரிடம் கதறி அழுதுள்ளனர். இதனால் அவர்களின் பெயர் முகவரியை மறைத்த தோடு அந்த வீடியோக்களையும் அளிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு திரும்பிய வெள்ளத்துரை என்பவரை தாக்கி கத்திமுனையில் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கண்ணன் மற்றும் அவனது சகோதரன் மீது புகார் தெரிவிக்கப்பட்டதால் இருவரையும் வழிப்பறி வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது டிக்டாக் காதல் மன்னன் கண்ணன் மீது காவல்துறையினர் பதிவு செய்யும் 6 வது வழக்காகும். ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு முதல் சேர்ந்தமரம், திருநெல்வேலிடவுன், ஊத்துமலை, உள்ளிட்ட காவல் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி,என 5 வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்கின்றனர் காவல்துறையினர். தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் குற்றப்பதிவேட்டில் கண்ணனுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டிக்டாக்கில் காதலுக்கு டிப்ஸ் கொடுத்து வந்த இந்த காமுகனை குண்டர் தடுப்புசட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
பிஞ்சிலேயே பழுத்ததால், மைனர் ஜெயிலுக்கு சென்றும் திருந்தாமல் டிக்டாக்கில் நிஜ மைனராக துள்ளாட்டம் போட்டதால், வாழ்க்கை தள்ளாட்டம் போட்டு கண்ணரை சிறையில் சிக்கவைத்திருக்கின்றது..!
Comments