அண்ணே, நிறுத்தனும்…! எல்லாத்தையும் நிறுத்தனும்…! இளம் பெண் சாராயவியாபாரி சடுகுடு

0 3495

தமிழகத்தில் மது ஒழிப்புக்கு என்று ஏடிஜிபி அந்தஸ்திலான அதிகாரி தலைமையில் பிரத்யேக பிரிவு உள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் கள்ளச் சாராய விற்பனைக்கு ஏரியா பிரிக்கும் விவகாரத்தில் சீனியர் சாராய வியாபாரியுடன், ஜூனியர் பெண் சாராய வியாபாரி ஒருவர் வாக்குவாதம் செய்யும் ஆடியோ வெளியாகியுள்ளது.

இரு ரவுடிகளுக்கிடையே நடக்கின்ற வாக்குவாதத்தை நகைச்சுவையாக சொல்லியிருப்பார் சின்னக் கலைவாணர் விவேக்..!அதே பாணியில் நாகை மாவட்டம் குத்தாலம் அசிக்காடு பகுதியைச் சேர்ந்த சீனியர் சாராய வியாபாரியான ஏசுராஜன், இளம் சாராய வியாபாரியான வாசுகி ஆகியோரின் வார்த்தை யுத்தம் ஆடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாராயம் விற்பதை போலீசுக்குப் போட்டு கொடுக்கிறாயா? என்று ஆண் குரல் கேள்வி எழுப்ப ஆரம்பமாகிறது அதகளம். குத்தாலம் போலீசுக்கு 5 ஆயிரம் ரூபாய் மாமூலாக கொடுத்ததாக போட்டு உடைக்கிறது பெண் குரல்..!ஒரு கட்டத்தில் நீங்கள் என்னைக் காட்டி கொடுத்தீங்கன்னா, நானும் உங்களை காட்டிக் கொடுப்பேன் என்று கொந்தளிக்கிறது அந்த பெண் குரல்..!

மதுவிலக்கு ஸ்பெசல் போலீசுக்கு, தான் சாராயம் விற்பதை காட்டிக் கொடுத்தது ஏன் ? என்று கேள்வி எழுப்பிய ஆண் சாராய வியாபரி, போலீசார் அதனை, தன்னிடம் போட்டுக் கொடுத்து விட்டதாக பெருமை கொள்கிறார்.இதையடுத்து 5 வருடங்களாக சாராயம் விற்பதாகவும், தந்தைக்கு பின்னர் தனது திருமண செலவுக்காகவே, சாராய வியாபாரத்தை தொடர்வதாகவும் உருகுகிறார் அந்த பெண் சாராய வியாபாரி.

முருகன் தோட்டத்து ஓரத்தில் இருக்கிற வாய்க்காலில் கள்ளச் சாராயம் விற்பதற்கு தான் இவ்வளவு களேபரம் என்பதை எந்த ஒரு அடியும், உதையும் இல்லாமல், போலீசுக்கு மட்டும் அல்ல ஊருக்கே இருவரும் போட்டி போட்டுக் கொண்டு ஒப்புதல் வாக்குமூலமாக அளித்திருப்பது தான் இந்த ஆடியோவின் ஹைலைட்..!

தமிழகத்தில் மது ஒழிப்புக்கு என்று தனியாக காவல்துறையில் ஏடிஜிபி அந்தஸ்திலான அதிகாரி தலைமையில் மாவட்டந்தோறும் பிரத்யேக மதுவிலக்கு அமலாக்க பிரிவு உள்ள நிலையில் இரு கள்ளசாராய வியாபாரிகள் செல்போனில் நடத்திய வார்த்தை யுத்தத்தால், போலீசாரின் சாராய பணவேட்டை வெளிச்சத்திற்கு வந்துள்ளது..!

ஆடியோவால் அதிர்ந்து போன காவல்துறையினர், உண்மையாகவே இரு சாராய வியாபாரிகளையும் வலைவீசித் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.வியாபாரப் போட்டியில் கள்ளச் சாராய சாவுகள் நிகழும் முன்பாக சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments