கொரோனா தடுப்பு நடவடிக்கை... மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் உத்தரவு

0 1977

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழகத் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவர்களின் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், மாவட்டத் தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெரிய தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் கொரானா தனிப் பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனைகளுக்குச் செல்பவர்களும், மருத்துவமனைகளில் இருந்து வெளியே செல்பவர்களும் கைகளை நன்றாகக் கழுவுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மருத்துவமனை முன்னேற்பாடு, தனி மனிதத் தூய்மை, பொது இடங்களின் துப்புரவு ஆகியவை குறித்துப் ஆலோசிக்க உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி கல்லூரிகள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், காவல், வருவாய், ரயில்வே, விமான நிலையம், துறைமுகம், பாதுகாப்பு ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளி கல்லூரிகள், அரசுத்துறை தனியார் துறை அலுவலகங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் துப்புரவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், கைகழுவத் தேவையான சானிடைசர்களை வைக்கச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

சுற்றுப்புறத் தூய்மை, தனிமனிதத் தூய்மை பேணுதல், தடுப்பு நடவடிக்கை ஆகியவை குறித்து ஊர்ப்புறங்களிலும் போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவிலும் 29 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு 52 முதல் 55 சர்வதேச விமானங்கள் சென்னை விமான நிலையத்துக்கு வரும் நிலையில், வெளி மாநிலங்களிலிருந்தும் விமானங்கள் வருகின்றன.

இதனிடையே இந்தியாவிலும்,  இத்தாலியை சேர்ந்த 16 பேர் உட்பட 29 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக சென்னை விமான நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளை பரிசோதனை செய்வதற்காக 27 மருத்துவர்கள், 30 செவிலியர்கள், 15 பாராமெடிக்கல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மூன்று பேருக்கு, கொரானா வைரஸ் பாதிப்பில்லை என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். மலேசியா மற்றும் இலங்கையிலிருந்து நேற்று திருச்சி விமானநிலையம் வந்த 11 மாத குழந்தை உள்ளிட்ட, 3 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதனடிப்படையில் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மூவருக்கும் வந்திருப்பது சாதாரன காய்ச்சல் தான் என்பதால், சிகிச்சைக்கு பிறகு இன்றே அவர்கள் வீடு திரும்புகின்றனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments