இந்தியாவில் தீவிரவாத அமைப்பு... NIA விசாரணையில் திடுக்கிடும் தகவல்
தமிழகம் மற்றும் பெங்களூரில் கைது செய்யப்பட்ட 10 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்தியாவில் தீவிரவாத அமைப்புகளை உருவாக்க உதவியது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிரவாத அமைப்புகளுக்கு சிம்கார்டு உள்ளிட்டவை வாங்கி கொடுத்து உதவிய விவகாரத்தில் தமிழகம் மற்றும் பெங்களூரில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை 6 நாள் காவலில் எடுத்து என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது. இதில், பச்சையப்பன், ராஜேஷ், அப்துல் ரஹ்மான், அன்பரசன் ஆகிய 4 பேர் மோசடியாக சிம்கார்டு வாங்கி பயன்படுத்தியது மற்றும் தமிழகத்தில் சட்ட விரோத நடவடிக்கைக்கு தமிழக ஐஎஸ்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளரான காஜா மைதீனுக்கு உதவியது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை மற்றும் சேலத்தில் இதேபோன்ற உதவிகளை லியாகத் அலி என்பவரும் செய்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முக்கியமாக பெங்களூரில் கைது செய்யப்பட்ட முகமது ஜெய்ஸ், ஐஎஸ்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளரான காஜாமைதீனுக்கு ஆன்லைன் மூலமாக வெளிநாட்டில் உள்ள தீவிரவாதிகளை தொடர்பு கொள்ளவும், இந்தியாவில் தீவிரவாத அமைப்பிற்கு ஆட்களை சேர்க்க உதவியது கண்டுபிடிக்கப்பட்டது.
தென்னிந்தியாவில் உள்ள காடுகளில் தீவிரவாத அமைப்பை உருவாக்கி, ஜிகாத் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் பொருட்களை வாங்கி பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவை அனைத்தையும் விசாரணை அறிக்கையாக என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். 10 பேருக்கான 6 நாள் காவல் முடிந்ததால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.
Comments