கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வு
கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 285 ஆக உயர்ந்துள்ள நிலையில், இத்தாலி மற்றும் அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்குப் பரவிய கொலைகார கொரோனா வைரசால் இதுவரை 3 ஆயிரத்து 285 பேர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் இந்தநோய்க்கு சுமார் 95 ஆயிரத்து 332 பேர் பாதிப்புக்கு உள்ளாகி, அவர்களில் 6 ஆயிரத்து 877 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 107 பேரும், ஈரானில் 92 பேரும் பலியாகி உள்ளனர். இத்தாலியில் 3 ஆயிரத்து 89 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக 587 பேர் கொரோனாவால் பீடிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளுக்கும் இத்தாலி தடை விதித்துள்ளது. மேலும் 11 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பள்ளிகளுக்கு 15ந் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக இத்தாலி அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவின் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தாக்குதலைத் தொடர்ந்து கலிபோர்னியா மாகாணத்தில் சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் பகுதியில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனாவின் அச்சத்தால் பெரும்பாலான அமெரிக்கக் கல்லூரிகளில் விளையாட்டுப் போட்டிகள் தவிர்க்கப்பட்டு வருகின்றன.
ஆனாலும் நாடு முழுவதும் புதிதாக 158 பேருக்கு வைரஸ் தாக்கம் இருப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் தற்போது முதன்முறையாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலும் 29 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு 52 முதல் 55 சர்வதேச விமானங்கள் சென்னை விமான நிலையத்துக்கு வரும் நிலையில், வெளி மாநிலங்களிலிருந்தும் விமானங்கள் வருகின்றன.
இதனிடையே இந்தியாவிலும், இத்தாலியை சேர்ந்த 16 பேர் உட்பட 29 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக சென்னை விமான நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளை பரிசோதனை செய்வதற்காக 27 மருத்துவர்கள், 30 செவிலியர்கள், 15 பாராமெடிக்கல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments