நிஜ போலீசுக்கு டப் கொடுத்த ரீல் போலீஸ்..! புலவர்களுக்குள் பொறாமை வரலாமா ?

0 4684

கோவையில் தனிப்படை போலீஸ் என கூறி வாகன சோதனை வசூல் முதல் கஞ்சா கலெக்சன் வரை நடத்தி நிஜ போலீசுக்கு சவால் விட்ட போலி சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். நிஜ போலீசாருக்கு டப் கொடுத்த போர்ஜரி போலீசின் பகீர் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

கோவையில் நிஜ போலீசுக்கு தலைவலியாக வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்த போர்ஜரி போலீஸ் தனிப்படை ஒன்று காவல்துறையினரிடம் கூண்டோடு சிக்கி உள்ளது..!

கோவை சரவணம் பட்டியில் உள்ள பேரடைஸ் மென்ஸ் ஹாஸ்டலுக்குள் சிறப்பு போலீஸ் தனிப்படை என புகுந்த 4 பேர் கொண்ட கும்பல், விடுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக மாணவர்களை மிரட்டி, 3 ஸ்மார்ட் போன்களை பறித்துக் கொண்டு காவல் நிலையம் வந்து பெற்றுக் கொள்ளும்படி கூறிச்சென்றனர். சரவணம்பட்டி காவல் நிலையம் சென்று விசாரித்த போது, இந்த சோதனைக்கும் ஒரிஜினல் போலீசுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் வாகன சோதனை என்ற பெயரில் பணம் கேட்டு மிரட்டியதாக 3 பேரை பிடித்து வந்தனர். விசாரணையில் அவர்கள் தான் தனிப்படை போலீஸ் என டிசர்ட்டுடன் சுற்றிய கேடி போலீஸ் என்பது தெரியவந்தது. இதில் போலீஸ் சீருடையுடன் இருந்த வினோத் என்பவன் தப்பிச்சென்று விட்டதாக கூறப்பட்டது.

அவனை பிடிக்க சரவணம்பட்டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். 4 தினங்கள் கடந்த நிலையில் மீண்டும் சரவணம்பட்டி துடியலூர் சாலையில் தன்னந்தனியாக காவல் உதவி ஆய்வாளர் சீறுடையுடன் ஜபர்தஸாக வாகன சோதனைக்கு களமிறங்கியுள்ளான் வினோத்..!

அப்போது ரோந்து பணியில் இருந்த நிஜ போலீசிடம் வசமாக சிக்கிக் கொண்டான். அவனை பிடித்து விசாரித்த போது கடந்த 6 மாதகாலமாக போலீஸ் உடையில் அவன் நடத்திய வசூல் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏற்றப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த காத்துக்குழியை சேர்ந்த 29 வயதான வினோத், சில தினங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்ற பாண்டிகுமார் என்பவரை மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்துள்ளான்.

அதே போல மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசம்பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்த தனியார் பள்ளி ஆசிரியர் மாரீஸ்வரகண்ணன் என்பவரின் வீட்டிற்குள்ளும் புகுந்தது, வினோத்தின் போலி தனிப்படை..! அங்கிருந்த ஆசிரியரிடம் தகாத உறவுக்காக சிங்கிளாக தங்கி இருக்கிறாயா ? என்று மிரட்டி, 5000 ரூபாய் ரொக்கபணம், செல்போன், ஆதார் கார்டு போன்றவற்றை பறித்து சென்றுள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டில் சிங்கிளாக தங்கி இருப்பது குற்றம் என்றும், அதற்கு அபராதமாக 30 ஆயிரம் ரூபாய் விதிப்பதாகவும், இந்த அபராத தொகையை மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் செலுத்தி விடுமாறு கூறி சென்றுள்ளது போர்ஜரி போலீஸ் படை என்று சுட்டிக்காட்டுகின்றனர் நிஜ காவல்துறையினர்.

மேட்டுப்பாளையம் போலீசிடம், ஏற்கனவே சீறுடையுடன் சிக்கிய போலி எஸ்.ஐ. வினோத் ஜாமீனில் வந்த பின்னர் சரவணம் பட்டி போலீசாருக்கு சவால் விடும் வகையில் வாகன சோதனை, கஞ்சா கலெக்சன், காதல் ஜோடி செலக்சன், என பலரிடம் பண வசூலிலும், தொடர் செல்போன் பறிப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளான் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. காதலர்கள் தனிமையில் சந்திக்கும் இடத்திற்கு சென்று அவர்களை மிரட்டி பணம் பறிப்பதையும் வாடிக்கையாக்கி வந்துள்ளான் என்கின்றனர் நிஜ காவல்துறையினர்..!

அதே நேரத்தில் இந்த கும்பலுக்கு பின்னணியில் நிஜ போலீஸ்காரர்கள் யாராவது உள்ளனரா என்ற சந்தேகத்தின் பேரில் வினோத்திடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கோவை மட்டும் அல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற போலிகள் பெருகுவதற்கு ஒருவகையில் காவல்துறையினரின் அபராத விதிப்பு முறையும் , சோதனையின் போது போலீசார் கறாராக நடந்து கொள்வதும் முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது.

வாகன சோதனையில் போது அபராதத்தை காவல்துறையினரிடம் செலுத்த தேவையில்லை என்றும், தண்டனைக்குரிய அபராத தொகையை நீதிமன்றத்தில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று கடுமையான உத்தரவு பிறப்பித்தால் போதும், பணம் கேட்கும் நபர்களை போலி போலீஸ் என்று மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வசதியாக இருக்கும்..! என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

போலிகளை மட்டுமல்ல பண வசூலில் ஈடுபட்டு, கண்ணியம் மிக்க காவல்துறைக்கு களங்கமாக இருக்க கூடிய சில களைகளையும் பிடுங்கி எறிய காவல் உயர் அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments