மாவட்டந்தோறும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க பிரதமர் அலுவலகம் நடவடிக்கை

0 2361

கொரோனா பாதிப்பு காரணமாக ஹோலி கொண்டாட்டங்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் மோடியும் ரத்து செய்துள்ளனர்.  மாவட்டம் தோறும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கவும் பிரதமர் அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்த ஆண்டு ஹோலிப் பண்டிகை மிகவும் குறைந்த அளவிலேயே கொண்டாடப்பட உள்ளது.குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற இருந்த ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. . இதே போன்று பிரதமர் மோடியின் ஹோலிப் பண்டிகை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மக்கள் பெரும் வாரியாக கூடும் இடங்களைத் தவிர்க்குமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்கள் நெருக்கமாக நிற்கவோ கைகுலுக்கவோ ஒருவரை தொட்டுப் பேசவோ தவிர்க்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தி இந்தியப் பண்பாட்டின்படி வணக்கம் சொல்வதே சாலச் சிறந்தது என்று தெரிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் வைரஸ் பரவலைத் தடுப்பது குறித்து உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். மாவட்டம் தோறும் கொரோனா சோதனை மையங்களை அமைப்பதற்கு இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவசியமில்லாமல் ஆலோசனைக் கூட்டங்கள், கருத்தரங்குகளை நடத்த வேண்டாம் என்றும் அரசு அலுவலகங்களுக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்புக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 21 இத்தாலியர்கள் மற்றும் 3 இந்தியர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சாவ்லா பகுதியில் உள்ள கண்காணிப்பு வார்டுக்கு அழைத்து வரப்பட்ட அவர்களிடம் பல்வேறு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களை தனியிடத்தில் வைத்து சிகிச்சைத் தருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்ப்டடுள்ளது.

டெல்லியில் உள்ள மருந்துக் கடைகளில் என்.90 மற்றும் என்.95 ரக முககவசங்களுக்கு திடீரென கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதிய அளவு விநியோகம் இல்லை என்று கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்..

ஹைதராபாதில் கொரோனா வைரஸ் பரவியதையடுத்து தெலுங்கு திரையுலகினரும் முக கவசம் அணிந்தபடி பணியில் ஈடுபடுகின்றனர். பிரபல நடிகரான பிரபாஸ் முக கவசத்துடன் படப்பிடிப்புக்குச் சென்றார்.

இதனிடையே கொரோனா பரவலைத் தடுக்க மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் பெரும் திரளாக கூடும் நிகழ்ச்சிகளைத் தவிர்க்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.எந்த ஒரு மாணவருக்கோ ஆசிரியருக்கோ எந்த வகையான கொரோனா பாதிப்பு கடந்த 20 நாட்களில் ஏற்பட்டிருந்தால் அவரை 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும்.

எந்த மாணவருக்காவது மூச்சுவிடுவதில் சிரமம், தொடர் இருமல்,சளி இருந்தால் ஆசிரியர்கள் விழிப்புடன் கண்காணித்து அவரை மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாணவர்கள் முழுமையாக குணமடையும் வரை பள்ளிக்கு வரக்கூடாது என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு அடிக்கடி கைகளை கழுவுதல், இருமல் தும்மல் ஏற்படும்போது கைக்குட்டையை பயன்படுத்துதல், உடல்நிலை சரியில்லாதபோது வகுப்புக்கு வருவதையும், பொதுஇடங்களில் கூடுவதையும் தவிர்ப்பது போன்றவற்றை வலியுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களின் குடும்பத்தாரிடம் மட்டுமின்றி அவர்களை சூழ்ந்துள்ள பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பரீட்சை எழுதும் மாணவர்கள் முகக் கவசம் அணிந்து வரவும் சிபிஎஸ் இ பள்ளித் தேர்வு இயக்ககம் அனுமதியளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments