பெர்முடாவின் விலகாத மர்மங்கள்..!
இயற்கை எப்போதும் பல கண்டுபிடிக்க முடியாத மர்மங்களையும், எண்ணிலடங்கா ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும், அறிவியல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மனிதனின் நாகரீகத்தை அடுத்தடுத்த பரிமாணங்களுக்கு கொண்டு சென்றாலும், இயற்கை நமக்களிக்கும் சாவால்களை மட்டும் மனிதனின் தொழில்நுட்பத்தால் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த பூமியில் இயற்கை நமக்களித்துள்ள பல சிக்கல்கள் இன்றும் தீர்க்கப்படாதவையாகவே உள்ளன.
அப்படி இன்றளவும் தன்னிடம் பல மர்மங்களை கொண்டுள்ளது தான் பெர்முடா முக்கோணம் (BERMUDA TRIANGLE). வட அமெரிக்காவின் கிழக்கே பனாமா கால்வாயில் அருகே உள்ளது பெர்முடா தீவு, இந்த தீவை ஒட்டி வட அட்லாண்ட்டிக் கடல் பகுதியில் அமைத்துள்ள புளோரிடா, பெர்முடா மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ (Puerto Rico) ஆகிய மூன்று இடங்களை உள்ளடக்கிய பகுதி தான் பல நூற்றாண்டு காலமாக பல்வேறு அமானுஷ்ய கதைகளுக்கு சொந்தமான பெர்முடா முக்கோணம் என அழைக்கப்படுகிறது.
இந்த மர்மமான பெர்முடா முக்கோணத்தை பற்றிய பல அனுபவங்களை, கதைகளாகவும், குறிப்புகளாகவும், புத்தகங்களாகவும் பலர் எழுதி வைத்துள்ளனர். அந்தவகையில் இந்த மர்ம இடத்தை பற்றி மக்களுக்கு முதலில் தெரியப்படுத்தியவர் கடற்பயணி கொலம்பஸ். 15ஆம் நூற்றாண்டில் அவர் கடல் வழியாக பயணம் மேற்கொண்டிருந்தார் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அவரின் படகு சென்ற போது அவர் வைத்திருந்த திசைகாட்டி செயல்படாமல் போனது, மேலும் அந்த பகுதியில் கடலும் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டது குறித்து தன்னுடைய பயணக் குறிப்பிலும் கொலம்பஸ் எழுதி இருக்கிறார். அதன் பிறகு 1800 களில் மேரி செலஸ்டி எனும் கப்பல் காணாமல் போனது. அதைத் தொடர்ந்து 1918-ம் ஆண்டு ‘யு.எஸ்.எஸ் சைக்ளோப்ஸ்’ என்கிற கப்பலும் சில நூறு பயணிகளுடன் காணாமல் போனது.
1945-ம் ஆண்டு பிளைட் 19 வகையைச் சேர்ந்த 5 ராணுவ விமானங்கள் அந்தப் பகுதியில் பறக்கும்போது காணாமல் போயின. 1949-ல் ஜமைக்கா நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் 39 பயணிகளுடன் மாயமானது. இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் அந்தப் பகுதியில் நிகழ்ந்ததாகப் பதிவாகி இருப்பதால் அது மர்மப் பிரதேசமாகவே திகழ்கிறது. மேலும் இப்படி தொடர்ச்சியாக நடக்கும் மர்மமான நிகழ்வுகள் ஏன் நடக்கின்றன என்பதற்கான காரணங்களும் மர்மமானதாகவே உள்ளன.
அந்த பகுதியை சுற்றி வசிக்கும் மக்களின் நம்பிக்கையை பொருத்தமட்டில் பெர்முடா முக்கோணம் அமைந்துள்ள பகுதியில் இதற்கு முன்பு ”அட்லாண்டிஸ்” எனும் கடவுள்கள் வாழ்ந்த நகரம் இருந்ததாகவும், பின் அந்த நகரம் கடலுக்கு அடியில் மூழ்கியதாகவும், அங்கு வாழ்ந்த மக்கள் தான் இன்று இந்த சம்பவங்களுக்கு காரணமாக உள்ளதாக கருதுகிறார்கள். ஆனால் பின்னர் நடந்த ஆராய்சிகள் மூலம் அங்கு இருப்பது காணாமல் போன கப்பல்களில் இருந்த பொருட்களாக இருக்கலாம் என கூறப்பட்டது.
ஆனால் அறிவியலின் கூற்றுப்படி இந்த பெர்முடா முக்கோணம் எனப்படுகின்ற பகுதியில் காற்றின் வேகம் எப்போதும் அதிகப்படியான வேகத்தில் இருப்பதாகவும், அதனால் அங்கு காற்று ஏற்படுத்தும் அதிகப்படியான அழுத்தம் காரணமாக அங்குள்ள மேகங்கள் அருங்கோண வடிவில் சுழல்வதாலும், கடலின் சீற்றமும் அதிகமாக இருப்பதால் தான் இங்கு செல்லும் கப்பல்களும், விமானங்களும் காணாமல் போவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. எதுவாக இருந்தாலும் இயற்கை மனிதனுக்கு எப்போதும் மர்மங்களையும், ஆச்சர்யங்களையும், நன்மைகளையும் அளித்துக் கொண்டே இருக்கும், இயற்கை சார்ந்து அதை பாதிக்காமல் இருந்தால், இயற்கை நமக்கு நன்மைகளை மட்டுமே அளிக்கும்.
Comments