சரபங்கா திட்டம் என்றால் என்ன..?

0 5505

மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரைச் சேலம் மாவட்டத்தின் 4 வட்டங்களில் உள்ள வடிநிலப் பகுதிக்குக் கொண்டுசெல்லும் சரபங்கா திட்டம் என்றால் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

மேட்டூர் அணை முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டும்போது அணையில் இருந்து உபரி நீரைக் கால்வாய் மூலம் திப்பம்பட்டி முதன்மை நீரேற்று நிலையத்துக்குக் கொண்டுசெல்லப்படுகிறது.

திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தின் ஒரு பகுதியாக 940 குதிரைத் திறன் கொண்ட 10 மின்மோட்டார்கள் மூலம் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எம்.காளிப்பட்டி ஏரிக்குத் தண்ணீர் கொண்டுசெல்லப்படும்.

எம்.காளிப்பட்டி ஏரியில் இருந்து கால்வாய்கள் மூலம் 23 ஏரிகளுக்கும் குட்டைகளுக்கும் தண்ணீர் கொண்டுசெல்லப்படும். எம்.காளிப்பட்டி தொகுப்பில் இருந்து ஒரு பகுதியாக வெள்ளாளபுரம் ஏரியில் அமைக்கப்படும் துணை நீரேற்று நிலையத்தில் 640 குதிரைத் திறனுள்ள 4 மின்மோட்டார்கள் மூலம் ஐந்தரைக் கிலோமீட்டர் தொலைவில் வடுகப்பட்டியில் உள்ள கீழ்நிலை நீர்த் தொட்டிக்குக் தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து 14 ஏரிகளுக்குத் தண்ணீர் வழங்கப்படுகிறது.

எம்.காளிப்பட்டி தொகுப்பில் இருந்து மற்றொரு பகுதியாகக் கண்ணந்தேரி ஏரியில் அமைக்கப்படும் துணை நீரேற்று நிலையத்தில் 830 குதிரைத் திறன்கொண்ட 2 மோட்டார்களின் மூலம் 5 கிலோமீட்டர் தொலைவில் ஒலக்கச்சின்னனூரில் உள்ள கீழ்நிலைநீர்த் தொட்டிக்கு நீர் கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து 30 ஏரிகளுக்கு வழங்கப்படும்.

திப்பம்பட்டி முதன்மை நீரேற்று நிலையத்தின் மற்றொரு பகுதியாக 1080 குதிரைத் திறன் 6 மின் மோட்டார்கள் மூலம் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நங்கவள்ளி ஏரிக்கு நீர் கொண்டுசெல்லப்படும். இதன்மூலம் 33 ஏரிகள் குட்டைகளுக்கு நீர் கிடைக்கும்.

இத்திட்டத்தின்மூலம் சேலம் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் உள்ள 12 பொதுப்பணித்துறை ஏரிகள், ஒரு நகராட்சி ஏரி, 4 பேரூராட்சி ஏரிகள், 83 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் குட்டைகள் என மொத்தம் 100 ஏரிகளுக்கு நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவதுடன், 4238 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

வெள்ளக்காலத்தில் திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து நொடிக்கு 214 கனஅடி வீதம் 30 நாட்களுக்கு வெள்ள உபரி நீரை மின்மோட்டார் மூலம் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments