சீல் வைக்கப்பட்ட ஆலைகளுக்கு உரிமம்...? வேலை நிறுத்தம் வாபஸ்..!
சீல் வைக்கப்பட்ட ஆலைகளுக்கு உரிமம் வழங்குவது குறித்து பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால், கேன் வாட்டர் உற்பத்தி ஆலைகள் நடத்தி வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் குடிநீர் ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் அனுமதியற்ற குடிநீர் ஆலைகளை மூட பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றி அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அதன்படி தமிழகம் முழுவதும் அனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மூடப்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலைகள் உரிமம் புதுப்பிக்கக் கோரி விண்ணப்பித்தால் 15 நாட்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். உரிமம் புதுப்பிக்க கோரி விண்ணப்பிக்கும் போது, குடிநீர் நிறுவனங்கள் 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டனர்.
உரிமம் பெறும் குடிநீர் ஆலைகள், தமிழக அரசாணை நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளனவா? குடிநீர் ஆலைகள் விதிகளை மீறி செயல்படுகின்றனவா? என கண்காணிக்க அனைத்து மாவட்டங்களிலும் 2 மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
குடிநீர் ஆலைகள் மட்டுமன்றி சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் பிற தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். நிலத்தடி நீர்மட்டம் தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் அளவீடு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, அனுமதியின்றி இயங்கிய குடிநீர் ஆலைகளை மூடும் நடவடிக்கைக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்றுள்ளனர்.
Comments