சுற்றுலா வந்த இத்தாலியர்களுக்கு கொரானா... ராஜஸ்தான், ஆக்ராவில் பீதி..!
கொரானா வைரஸ் பாதிப்புடன் இத்தாலி சுற்றுலா பயணிகள், ராஜஸ்தான், ஆக்ரா மற்றும் டெல்லியின் பல இடங்களில் சுற்றி பார்த்திருப்பதால், அவர்கள் மூலம் அங்கெல்லாம் வேறு யாருக்கும் கொரானா வைரஸ் பரவியிருக்குமோ என்று அதிகாரிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இத்தாலி சுற்றுலா பயணிகள் 23 பேர், கடந்த மாதம் 21ம் தேதி டெல்லி விமான நிலையம் வந்திறங்கியதும், பிறகு பேருந்து மூலம் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள மாண்ட்வா, பிகானீர், ஜெய்சால்மர், உதய்பூர், ஜோத்பூர் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அரண்மனைகள் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை சுற்றி பார்த்ததும், பின்னர் ஹோட்டல்களில் தங்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வந்த போது இத்தாலி சுற்றுலாப் பயணிகளில் ஒருவருக்கு திடீர் காய்ச்சல் ஏற்படவே, அவர் அங்குள்ள சவாய் மான் சிங் (jaipur sawai man singh hospital) மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த நபருக்கு கொரானா வைரஸ் இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து, அந்த நபரின் மனைவிக்கும் சோதனை நடத்தப்பட்டதில், அவருக்கும் கொரானா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜெய்ப்பூர் மருத்துவமனையில் அந்த நபர் வெண்டிலேட்டரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த நபரின் மனைவியும் தனிவார்டில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கொரானா உறுதி செய்யப்பட்ட இத்தாலி சுற்றுலாக்குழுவில் இடம்பெற்று இருந்த எஞ்சிய 21 பேர் ஆக்ரா சென்று அங்கு பல இடங்களை சுற்றிப் பார்த்துள்ளனர். இறுதியாக அவர்கள் டெல்லி சென்ற நிலையில் அவர்களுக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது 21 பேரில், மேலும் 15 பேருக்கு கொரானா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 15 பேரில் 14 பேர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த வாகன ஓட்டுனர். இவர்கள் 15 பேரும் டெல்லி அருகே சாவ்லாவில் (Chhawla) உள்ள இந்தோ திபெத் எல்லை போலீஸ் முகாமில் நோய் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொரானா உறுதி செய்யப்பட்டுள்ள இத்தாலியர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் சென்று வந்த இடங்களிலும் பலருடன் தொடர்பில் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவர்கள் சுற்றுலா சென்ற இடங்கள், அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் போன்றவற்றை கண்டுபிடித்து அதிகாரிகள் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
ஆனால் மொத்தமாக 16 இத்தாலியர்கள் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவருமே ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள மாண்ட்வா, பிகானீர், ஜெய்சால்மர், உதய்பூர், ஜோத்பூர் ஆகிய நகரங்களில் உலவியுள்ளனர் என்பதால் அங்கு கொரானா அறிகுறிகளுடன் இருப்பவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
இதே போல் இத்தாலியர்கள் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவிற்கும் சென்று திரும்பியுள்ளனர். ஆக்ராவில் 6 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 6 பேருமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் சுற்றுலா வந்த இத்தாலியர்களை தொடர்பு கொண்டவர்களா என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியாவிற்கு சுற்றுலா வந்த இத்தாலியர்களால் ராஜஸ்தான் மாநிலம் மற்றும் ஆக்ராவில் கொரானா பீதி அதிகரித்துள்ளது.
Comments