ஹைதராபாத்தில் கொரானா பாதிப்பு என்ஜீனியருடன் தொடர்பில் இருந்த 36 பேருக்கு நோய் தொற்று அறிகுறி

0 10921

ஹைதராபாத்தில் கொரானா பாதித்த என்ஜீனியருடன் தொடர்பிலிருந்த 36 பேருக்கும் கொரானா வைரஸுக்கான சில அறிகுறிகள் இருப்பதால் தனிமை வார்டில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 24 வயதாகும் என்ஜீனியர் ஒருவர், கர்நாடக மாநிலம் பெங்களூரில் பணிபுரிந்து வருகிறார். பணி நிமித்தமாக துபாய்க்கு கடந்த மாதம் 15ம் தேதி சென்ற அவர், பின்னர் 20ம் தேதி பெங்களூரு திரும்பி வந்தார்.

2 நாட்கள் அங்கு பணியாற்றிய அவர், பேருந்து மூலம் ஹைதராபாத்துக்கு வந்தார். அங்கு கடந்த திங்கள்கிழமை உடல்நிலை பாதிக்கப்படவே, பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் மூலம் வேறு யாருக்கும் கொரானா பரவியிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்தது.

இதனை தொடர்ந்து துபாயில் இருந்து திரும்பிய பிறகு கொரானாவால் பாதிக்கப்பட்ட என்ஜினியருடன் தொர்பில் இருந்த 88 பேர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். உடனடியாக அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் ஹைதராபாத் என்ஜீனியருடன் பேருந்தில் பயணித்த மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 36 பேருக்கு கொரானா வைரஸுக்கான சில அறிகுறிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து 36 பேரும் தனிமை வார்டில் வைத்து கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வைரஸ் அறிகுறி இல்லாதோர் தொடர்ந்து அவர்களது வீடுகளிலேயே வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். 14 நாட்கள் வரை வெளியே செல்ல வேண்டாம் என்று அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொரானா வைரஸ் பாதிப்பைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஹோலி பண்டிகைக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொரானா வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் கூட்டம் சேர்வதைத் தவிர்க்குமாறு உலகம் முழுவதும் உள்ள சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்த ஆண்டு தான் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு எந்தக் கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்வதில்லை என முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேபோல உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஹோலிக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளதுடன், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ளப் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை  மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தவிர நாடு தழுவிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளது. அதன் ஒரு பகுதியாக முதல் கட்டமாக மூன்றரை ((3½ )) லட்சம் முக கவசங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, ஹைதராபாத்தில் மேலும் ஒரு என்ஜீனியருக்கு கொரானா பாதிப்பு உறுதியானதையடுத்து, அவர் பணிபுரிந்து வந்த ரஹேஜா மைன்ட்ஸ்பேஸ் ஐ.டி. பார்க்கில் 2 கட்டிடங்கள் (Raheja Mindspace IT Park) உடனடியாக மூடப்பட்டது. ஹைதராபாத்திலுள்ள ரஹேஜா மைன்ட்ஸ்பேஸ் ஐ.டி. பார்க்கில் பணியாற்றி வரும் அவர், இத்தாலிக்கு அண்மையில் சென்றுவந்தார்.

அவருக்கு நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனையில் கொரானா பாதிப்பு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் தனிமையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதனை கருத்தில் கொண்டு, ரஹேஜா மைன்ட்ஸ்பேஸ் ஐ.டி. பார்க் வளாகத்திலுள்ள 2 கட்டிடங்கள் மூடப்பட்டு, இன்று பணிக்கு வந்த ஊழியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அந்த என்ஜீனியர் பணிபுரிந்து வந்த அலுவலகம் இருக்கும் 2ஆவது தளம் மருந்து தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது.

இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,  கொரானா வைரஸ் நிலவரத்தை முக்கிய பிரச்னையாக  தமது அரசு கருதுவதாகவும், கொரானா நிலவரத்தை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக தமது தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். கொரானா நிலவரத்தை நெருக்கடி நிலை போல கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆதலால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கெஜ்ரிவால் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments