நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட விவகாரம் : 3 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை
சென்னை தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தேனாம்பேட்டை அருகே நேற்று மாலை அண்ணா சாலையில் சென்று கொண்டிருந்த பார்ச்சுனர் கார் மீது இருசக்கரவாகனத்தில் வந்த மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு தனிப்படை திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறிலும், மற்ற இரு தனிப்படையினர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மர்மநபர்கள் வந்த இருசக்கர வாகன எண் அடையாளம் காணப்பட்டு, தியாகராயநகரை சேர்ந்த அதன் தற்போதைய உரிமையாளர் கண்டறியப்பட்டுள்ளார். அவருக்கு மெக்கானிக் ஒருவர் வேறொருவரிமிடருந்து அந்த வாகனத்தை வாங்கிக் கொடுத்ததும், கல்லூரி மாணவரான இருசக்கர வாகன உரிமையாளரின் மகன் அதனை பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முதல் அந்த மாணவரும், அவரது மற்றொரு நண்பரும் தலைமறைவாகியுள்ளதோடு, அவர்களது செல்போன் எண்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. இருவரையும் தீவிரமாக தேடி வரும் போலீசார், தலைமறைவான கல்லூரி மாணவர்களே நேரடியாக வெடிகுண்டு வீச்சில் ஈடுபட்டனரா, அல்லது பைக்கை ரவுடி கும்பலை சேர்ந்தவர்களுக்கு இரவல் கொடுத்தார்களா என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதனிடையே வெடிகுண்டு வீச்சில் இருந்து நூலிழையில் தப்பிய காரில் சென்றவர்கள் யார் எனவும் விசாரணை நடைபெற்றுவருகிறது. வடசென்னையை சேர்ந்த பிரபல தாதா அந்த காரில் சென்றிருக்கலாம் என்றும், அவரை கொலை செய்வதற்காக அவரது விரோதிகள் நாட்டு வெடிகுண்டு வீச்சில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது வரை பைக்கின் உரிமையாளர், பைக்கை வாங்கி தந்த மெக்கானிக் உள்பட 10 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர் பிடிபட்டால் அனைத்து விவரங்களும் தெரியவரும் என்றும், இன்று மாலைக்குள் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் சிக்குவார்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே வெடிகுண்டு வீசப்பட்ட பார்ச்சுனர் காரை, 4 இருசக்கர வாகனங்களில் 8 பேர் கொண்ட ரவுடி கும்பல் நீண்ட நேரமாகவே பின் தொடர்ந்து வந்தது தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பாக அண்ணா சாலை நெடுகிலும் உள்ள சிசிடிவிக் கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த இந்த தகவல் தெரிய வந்துள்ளது. மேலும் ரவுடி கும்பல் காரை பின் தொடர்ந்து வரும் சிசிடிவிக் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
தற்போது வெளியான சிசிடிவி காட்சிகளை வைத்து காரிலிருந்த ரவுடியை வாகன நெரிசல் குறைவாக உள்ள இடத்தில் வைத்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கி கொலை செய்ய முயன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Comments