இந்தியாவில் புதிதாக 15 பேருக்கு கொரோனா வைரஸ் ?
இந்தியாவில் ஏற்கெனவே 6 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிதாக இத்தாலி சுற்றுலா பயணிகள் 15 பேருக்கும் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது
சீனாவின் உகான் பகுதியில் இருந்து பரவி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரானா வைரஸ், இந்தியாவிலும் தற்போது பாதிப்புகளை ஏற்படுத்த துவங்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் வந்த இத்தாலி தம்பதியர் 2 பேர், பெங்களூரு என்ஜீனியர், இத்தாலி சென்று வந்த டெல்லி நபர் உள்ளிட்ட 6 பேருக்கு வைரஸ் இதுவரை உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்தியா வந்த இத்தாலி சுற்றுலா பயணிகள் 21 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 15 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பதை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உறுதி செய்துள்ளது.
இதையடுத்து 15 பேரும், டெல்லியின் சவாலா ((Chhawla )) பகுதியில் இருக்கும் இந்தோ திபெத் எல்லை போலீஸ் முகாமில் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலி சென்று வந்த டெல்லி நபர் ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சியில் நொய்டா மாணவர்கள் சிலர் கலந்து கொண்டிருந்தனர். இதை கருத்தில் கொண்டு, அந்த மாணவர்கள் பயிலும் 2 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு சுத்தபடுத்தப்பட்டு வருகிறது.
துபாய் சென்று வந்த ஹைதராபாத் என்ஜீனியர்கள் உள்ளிட்ட 88 பேரிடம் முன்னெச்சரிக்கையாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஹைதராபாத் என்ஜீனியர்கள் 36 பேருக்கு கொரானா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரத்த மாதிரி உள்ளிட்டவை சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே டெல்லி நொய்டாவில் கொரானா தொற்று பாதித்த நபர் நடத்திய பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்ற 6 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு கொரானா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருந்தாலும் இந்த 6 பேரும் அடுத்த 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு நோய் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என கவுதம் புத்தா மாவட்ட ஆட்சியர் பி.என்.சிங் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு அவர்களுக்கு மீண்டும் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டு தொற்று ஏற்படவில்லை என மீண்டும் உறுதியான பின்னரே வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி அருகே சாவ்லாவில் ((Chhawla)) உள்ள இந்தோ திபெத் எல்லை போலீஸ் முகாமில் நோய் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இத்தாலி நாட்டினர் 24 பேரில் 15 பேருக்கு கொரானா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட இத்தாலி நபரின் சுற்றுலாக் குழுவில் இடம் பெற்றவர்கள் ஆவர். சாவ்லா முகாமில் வைக்கப்பட்டுள்ள 24 பேரில் இந்தியர்களான வாகன ஓட்டுநர், சுற்றுலா வழிகாட்டி மற்றும் பேருந்து உதவியாளர் ஆகியோரும் அடக்கம். இவர்களுக்கு தொற்று பாதித்ததாக தகவல் இல்லை.
இத்தாலி நபரின் மனைவிக்கும் ஏற்கனவே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டாலும் அவரது ரத்த மாதிரி மீண்டும் சோதனை செய்வதற்காக புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த இத்தாலி தம்பதி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள சவாயு மான் சிங் மருத்துவமனையில் தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளளனர்.
Comments