கல்லூரி மாணவர்களின் டேட்டாக்கள் திருட்டு..! பணம் பறிப்பு கும்பல் கைது
சென்னை ராமாவரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்களின் விவரங்களை கணினியில் இருந்து ஹேக் செய்து திருடி, மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு நூதன முறையில் பணம் பறிக்க முயன்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியில் படிக்கின்ற வெளியூர் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், கல்லூரியில் இருந்து பேசுவதாகக் கூறி கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அதனை குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தும் படியும் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த மாணவர்களின் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, கட்டணம் ஏதும் உயர்த்தப்படவில்லை என பதிலளித்ததுடன், தொடர்பு கொண்ட நபர்களின் செல்போன் எண்ணைப் பெற்று ராயலா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்ஆய்வாளர் தாம்சன் தலைமையிலான தனிப்படையினர் சிம்கார்டு முகவரியை வைத்து கர்நாடக மாநிலம் கோலாரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரை பிடித்து விசாரணையை தொடங்கினர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த பணம் பறிப்பு மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சேக் அகமது, லத்தீப், சாதிக் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 சிம்கார்டுகள், ஒரு லேப்டாப், செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் செல்போன் உள்ளிட்ட முழுவிவரங்கள் அடங்கிய டேட்டாவை ஹேக்கர்களிடம் இருந்து இந்த மோசடி கும்பல் விலை கொடுத்து வாங்கியுள்ளது.
செல்போன் மூலம் தொடர்பு கொண்டால் சிக்கிக் கொள்வோம் என்பதால் சிம்கார்டை பயன்படுத்தி கணினி மூலம் பேசும் கருவியில் இருந்து பெற்றோரை தொடர்பு கொண்டு பணம் பறிக்க திட்டமிட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த மோசடிக் கும்பலை சேர்ந்த மேலும் ஒருவரை தேடிவரும் நிலையில், ஆரம்பத்திலேயே கல்லூரி நிர்வாகம் உஷாராக புகார் அளித்ததால் மோசடி கும்பலை கைது செய்ய முடிந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
செல்போன் நம்பருக்கு பரிசு விழுந்திருப்பதாக வரும் அழைப்புகள், பள்ளி கல்லூரிகளில் இருந்து பணம் கேட்டு வரும் அழைப்புகள் என அனைத்திலும் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் பணத்தை இழக்க நேரிடும் என்று காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.
Comments