சட்டவிரோத குடிநீர் ஆலைகள் தொடர்பான வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பு

0 1521

தமிழகத்தில் மூடப்பட்ட குடிநீர் ஆலைகளை தற்காலிகமாக இயக்குவது தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அனுமதியின்றி செயல்பட்ட 650 குடிநீர் ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், சீல் வைக்கப்பட்ட ஆலைகளுக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உரிமத்தை புதுப்பிக்கக் கோரி 116 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதையடுத்து, குடிநீர் ஆலைகள் கடந்த காலங்களில் செய்த சட்டவிரோத செயல்களுக்கு உரிய விலையைக் கொடுக்க வேண்டாமா என்றும் நிலத்தடியில் இருந்து தண்ணீர் எடுக்கும் அளவிற்கு ஏற்ப குடிநீர் நிறுவனங்களிடம் ஏன் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதை தொடர்ந்து, பல்வேறு அமைப்புகளில் அனுமதியை பெற்றே குடிநீர் விநியோகிக்கப்படுவதாக குடிநீர் ஆலைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் எடுக்கும் நிலத்தடி நீரில் ஒரு சதவீத அளவே குடிநீர் உற்பத்தியாளர்கள் எடுப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பத்திரிகைகளின் வாயிலாக அறிய முடிந்தது என்று தெரிவித்த நீதிபதிகள், போராட்டம் மூலமாக நீதிமன்றத்திற்கு நெருக்கடி கொடுக்கலாம் என நினைத்தால் அது தவறு என்று எச்சரித்தனர்.

இதையடுத்து, அனுமதியின்றி செயல்படக்கூடிய குடிநீர் ஆலைகளை சீல் வைப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், மூடப்பட்ட ஆலைகளை தற்காலிகமாக இயக்குவது தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments