அவர் இருக்கும் போது உன்னுடன் எப்படி வாழ முடியும்? கொலையில் முடிந்த கேள்வி

0 3474

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமணமான பெண்ணுடனான பழக்கத்திற்கு இடையூறாக இருந்த அவரது கணவரை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் இருக்கும் போது உன்னுடன் எப்படி வாழ முடியும் என இளம் பெண் கேட்டதால் அரங்கேறிய கொலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

விருதுநகர் ஆணைக்குழாய் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், மதுரை கப்பலூரைச் சேர்ந்த ஜோதிலட்சுமி என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு, அங்கேயே வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்த மணிகண்டன், அதில் நஷ்டம் ஏற்பட்டதால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஏஜெண்டாக பணியாற்றி வந்தார்.

இதற்கிடையே ஆறு மாதங்களுக்கு முன்பு தனது தந்தை விபத்தில் சிக்கி காயம் அடைந்தால் அவருக்கு உதவியாக இருக்க பெற்றோர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார் ஜோதிலட்சுமி.

செல்வலட்சுமி நகரை சேர்ந்த தூரத்து உறவினரான கார்த்திக் என்ற இளைஞர், அவ்வப்போது வீட்டில் இருந்து ஜோதிலட்சுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு நெருக்கமான பழக்கமாக மாறியதாகக் கூறப்படுகிறது.

தந்தை உடல்நிலை சரியான பின்பு வீடு திரும்பியும் கார்த்தியுடன் பேசி பழகி வந்ததால் கணவர் மணிகண்டனுக்கு விசயம் தெரியவந்துள்ளது. இதனால் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த வாரம் ஜோதிலட்சுமி தனது தாயார் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுள்ளார். மணிகண்டனும் விருதுநகரில் உள்ள பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இச்சூழலை சாதகமாக்கிக் கொள்ள நினைத்த கார்த்திக், ஜோதிலட்சுமியிடம் தன்னுடன் வாழும் படி கூறியுள்ளார். கணவர் இருக்கும் போது எப்பது உன்னுடன் வாழ முடியும் என ஜோதிலட்சுமி பதில் கூற, மணிகண்டனை தீர்த்துகட்டுவது என முடிவெடுத்துள்ளார் கார்த்திக்.

அதன் படி திங்கட்கிழமை அன்று விருதுநகருக்கு நண்பருடன் சென்ற கார்த்திக், மணிகண்டனை சந்தித்து ஜோதிலட்சுமியின் தாயார் சமரசம் பேச வரச் சொன்னதாக கூறி, இருசக்கர வாகனத்தில் திருமங்கலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அன்றைய தினம் இரவு தனது தாயாருக்கு போன் செய்த மணிகண்டன் அம்மா என இரு முறை கதறியப்படி கூறிவிட்டு இணைப்பு துண்டித்துள்ளார். சற்று நேரத்தில் ஜோதிலட்சுமியின் தாயார் மணிகண்டன் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது மகனை கார்த்திக் கொலை செய்து விட்டதாக தன்னிடம் சொன்னதாகக் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ந்துப் போன பெற்றோர் மதுரை ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஜோதிலட்சுமியின் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான சிறிய அறை முன்பு கத்திக்குத்து காயங்களுடன் மணிகண்டனின் சடலம் மீட்கப்பட்டது.

தலைமறைவாக உள்ள கார்த்திக் ஒரு சிலருடன் சேர்ந்து இக்கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதிலட்சுமி மற்றும் அவரது பெற்றோருக்கு இதில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments