மகப்பேறு கால விடுப்பு, ஊதியம் குறித்த வழக்கில் உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

0 4617

முதல் பிரசவத்தில் 2 குழந்தைகள் பெற்ற மத்திய அரசு பெண் ஊழியர், இரண்டாவது முறை மகப்பேறு விடுமுறைக்கான ஊதியத்தை கேட்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரக்கோணத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வீராங்கனையாக பணியாற்றி வருபவர் ஆயிஷா பேகம். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனக்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்ததாகவும், அதற்காக 6 மாதங்கள் பேறுகால விடுப்பும் ஊதியமும் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது பிரசவத்திற்காக, 6 மாதம் பேறுகால விடுப்பு எடுத்ததாகவும், அதற்கான ஊதியத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படை வழங்க மறுப்பதாகவும் முறையிட்டிருந்த அவர், 2வது பிரசவத்திற்கான விடுமுறை காலத்திற்கு ஊதியத்தை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தாலும், 2-வது பிரசவத்திற்கான பேறுகால விடுமுறையும், அந்த காலத்திற்கான ஊதியமும் பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது என கடந்த ஆண்டு உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்தும் அதனை ரத்து செய்ய கோரியும் மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. தமிழக அரசின் பேறுகால விடுமுறை விதிகளின் அடிப்படையிலேயே தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும், ஆனால், மனுதரார் மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவில் உள்ளவர் என்பதால் மத்திய அரசின் விடுமுறை விதிகள் மட்டுமே பொருந்தும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசின் சிவில் சர்வீஸ் விதிகளின்படி 2 குழந்தைகளுக்கு மட்டும் தலா 180 நாட்கள் பேறுகால விடுமுறையும், அதற்கான ஊதியமும் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. 2 குழந்தைகளுக்கு மேல் வேண்டாம் என்பதற்காகத்தான் இந்த திட்டமே கொண்டு வரப்பட்டுள்ளது.

முதல் பிரசவத்திலேயே 2 குழந்தைகள் பிறந்து விட்டதால், 2ஆவது பிரசவத்துக்கும் ஊதியத்துடன் விடுமுறை கேட்க மனுதாரருக்கு உரிமையில்லை என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். அதேசமயம், இதுபோன்ற சில அபூர்வமான வழக்குகளில் விதிகளை தளர்த்துவது குறித்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், உரிய முடிவை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments