இந்தியன் 2 படப்பிடிப்பில் 3 பேர் பலியான வழக்கு... கமலிடம் விசாரணை..!

0 1972

3 பேரை பலி கொண்ட இந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். 

இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கிரேன் விபத்தில் 3 பேர் உயிரிழந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இயக்குனர் ஷங்கரிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டது.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக இயக்குனர் சங்கர் வந்திருந்த போது, அவரை ஊடக, பத்திரிக்கை புகைப்பட கலைஞர்கள் படம்பிடிக்காமல் இருக்க, காவல் ஆணையரக போலீசார் செய்த சிறப்பு கவனிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது.

2-வது தளத்தில் இருந்த, வழக்கின் விசாரணை அதிகாரி அலுவலகத்திற்கு செல்லாமல், ஷங்கரை 8-வது தளத்தில் இருந்த காவல் ஆணையர் அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மட்டும் பயன்படுத்தும் லிப்ட் மூலம் அழைத்துச் சென்று வேறொரு கார் மூலம் சங்கரை அனுப்பி வைத்தனர். ஆனால், இன்று நடிகர் கமலஹாசன் விசாரணைக்கு ஆஜராக வந்த போது, அப்படியே தலை கீழாக நடந்தது. எந்த காவலரும் அவரை மேலே அழைத்துச் செல்ல உடன் வரவில்லை.

பாதுகாப்பு பிரிவு போலீசார் வழக்கமாக பின்பற்றும் நடைமுறைப்படி செல்போனில் படம் எடுத்துக் கொண்ட பிறகே அனுமதித்தனர். தரை தளத்தில் உள்ள பொதுமக்கள் லிப்டுக்கு வந்த கமல்ஹாசன், லிப்ட் முழுவதும் கூட்டமாக இருந்ததால் காத்திராமல் படிக்கட்டில் ஏறி விசாரணை அதிகாரி நாகஜோதி அறைக்கு சென்றார்.

சுமார் 3 மணி நேர விசாரணைக்குப் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், போலீசாருடனான கலந்துரையாடலின்போது, படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவங்களை கோர்வையாக எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.

முன்னதாக, காவல் ஆணையரக வளாகத்தில் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் கூடியிருந்ததாலும், வேலித்தடுப்புகள் சாய்ந்ததாலும் சிறிய பரபரப்பு நிலவியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments