வூகான் நகரில் தொடங்கி 76 நாடுகளுக்குப் பரவிய கொரோனா
சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் 76 நாடுகளில் தற்போது பரவியுள்ளது. இந்த நோய்க்கு தற்போது 90,443 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3,119 பேர் உயிரிழந்ததாகவும் சிகிச்சைக்குப் பின் 48 ஆயிரத்து 128 பேர் மீண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரானா பாதிப்பை அடுத்து டிவிட்டர் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள், அலுவலகங்களுக்கு வராமல வீடுகளில் இருந்தே பணியாற்றுவதை ஊக்குவித்து வருகிறது. எனினும் இந்த வழிகாட்டுதல் கட்டாய உத்தரவாக இன்றி ஊழியர்களின் விருப்பத்துக்கு ஏற்பவே செயல்படுத்தப்படுகிறது. அலுவலகத்தில் வந்து பணியாற்ற விரும்பும் ஊழியர்களுக்காக அலுவலகங்களில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆஸ்திரேலியாவில் 31-வது நபருக்கு கொரானா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த அவர் குயீன்ஸ்லாந்தில் வசித்து வரும் நிலையில் அண்மையில் துபாய் சென்று திரும்பிய அவருக்கு கொரானா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரானா வைரசைக் கட்டுப்படுத்தும் சுகாதாரத்துறை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பவர்கள் உயிர்ப்பாதுகாப்புச் சட்டப்படி கைதுசெய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கு சென்றுவந்தனர், யாருடன் தொடர்பில் உள்ளனர் உள்ளிட்ட தகவல்களை தெரிவிக்க மறுப்பவர்கள், தூய்மை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 102 பேர் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்தை அடுத்து சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனைகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமான நிலையங்களில் வந்து இறங்கும் பயணிகளிடம் கூடுதல் விவரங்களை பெற விமான நிறுவனங்களை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே சான் ஆண்டனியோ நகரில் கண்காணிப்பு மையத்தில் இருந்து தவறுதலாக விடுவிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அதன் பிறகு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சியாட்டில் டவர்ஸ் எனப்படும் 44 அடுக்கு மாடிக் கட்டிடத்தின் ஊழியர் ஒருவர் கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்ததை அடுத்து அந்தக் கட்டிடமே மூடப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் மாணவரின் பெற்றோரில் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதியானதை அடுத்து நொய்டாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்று காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் ஆய்வு நடத்திய உத்தரப் பிரதேச சுகாதாரத் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மாணவனின் ரத்த மாதிரியை சேகரித்து ஆய்வக சோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
இதனிடையே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளைத் தவிர அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் கொரானா தொற்று உறுதியான நிலையில், அதை ஒட்டி இருக்கும் நொய்டா மற்றும் கவுதம் புத்தம் நகரில் உள்ள நூற்றுக்கணக்கான ஐ.டி.நிறுவனங்களுக்கு அது குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா நகரமான ஆக்ராவில் 6 பேருக்கு கொரானா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த 6 பேரும் டெல்லியில் கொரானா தொற்று பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவித்துள்ள ஆக்ரா சுகாதார நிர்வாகம்,இவர்களின் ரத்த மாதிரியை புனேவில் உள்ள அரசு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர நோய் தடுப்புக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மார்ச் மூன்றாம் தேதியோ, அதற்கு முன்போ விசா வழங்கப்பட்டு, அவர்கள் இன்னும் இந்தியாவுக்குள் வராமல் இருந்தால் அந்த விசாக்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
Comments