செவித் திறனின் அவசியம் - உணர்வது முக்கியம்..!

0 3081

சர்வதேச செவித்திறன் நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. செவித்திறனின் அவசியம் மற்றும் காதுகேளாமையின் அறிகுறிகள் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு...

உலகில் 3 கோடியே 40 லட்சம் குழந்தைகள் காது கேளாமை பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். 2050ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 90 கோடியை எட்ட வாய்ப்புள்ளதால், செவித்திறன் குறித்த விழிப்புணர்வு அவசியமாகிறது.

எனவேதான், இந்த நாளை சர்வதேச செவித்திறன் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது உலக சுகாதார நிறுவனம். செவித்திறன் இழப்பு ஏற்படாமல் உரிய நேரத்தில் கவனித்தல் என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தாண்டுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

உட்செவிக்குள் ஒலி அலைகளை நரம்பு உணர்வுகளாக மாற்றி மூளைக்கு அனுப்பும் காச்லி (Cochlea) முழு வளர்ச்சி அடைந்துவிடுவதால், கருவில் உள்ள குழந்தை 20-வது வாரத்திலேயே கேட்கும் திறனைப் பெற்று விடுகிறது. குழந்தை பிறந்தபின் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டால், பேச்சிலும், மொழியைக் கற்பதிலும் தடையோ, தாமதமோ ஏற்படுகிறது.

செவித்திறன் சார்ந்த செயல்பாட்டைத் தெரிந்துகொண்டாலே, குழந்தைக்கு செவித்திறன் குறைபாடு உள்ளதா, இல்லையா என்பதை எளிதில் கண்டறிய முடியும்.

குழந்தை பிறந்தது முதல் 3 மாதங்கள் வரை, பெரும் சப்தத்தை உணர வேண்டும். யாராவது சப்தமாக பேசினால் விழித்துக் கொள்ள வேண்டும்..

6 மாதங்களில் குழந்தைகள் தாயின் குரலுக்கும், தன்னைச் சுற்றி எழுப்பப்படும் புதிய ஒலிகளுக்கும் திரும்பிப் பார்க்க வேண்டும்.

9 மாதத்திற்குள், தாய் பேசும் வா, போ போன்ற சிறுசிறு வார்த்தைகளை புரிந்து கொள்ளவும், ஆ.. ஊ.. எனக் குரல் எழுப்பவும் வேண்டும்.

ஒன்றே கால் வயதுக்குள், அந்தக் குழந்தை தன் பெயரை அழைத்தால் செவிமடுப்பதுடன், மாமா, பாபா, தாதா போன்ற வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும்

இரண்டு வயதுக்குள், தாய் சொல்லும் வாக்கியங்களை புரிந்து கொண்டு அதனை செய்து காட்டவும், சிறு வார்த்தைகளை பேசவும் வேண்டும்.

குழந்தைகளின் செவித்திறனை உரிய நேரத்தில் கண்டறிவதும், பாதிப்பு ஏதேனும் இருப்பின் உடனே சரிசெய்வதும் ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலத்திற்கும் மிகமிக அவசியம்..

இதேபோன்று பெரியவர்களும் செவித்திறனை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

காதுகளை சுத்தம் செய்வதாகக் கூறிக் கொண்டு கூர்மையான பொருட்களை வைத்துக் குடையவோ, செவியை பாதிக்கும் பொருட்களை காதில் நுழைக்கவோ கூடாது. அன்றாடம் உபயோகிக்கும் மருந்துகளும்கூட செவித்திறனை வெகுவாக பாதிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஐம்புலன்களில் ஒன்றான செவியைப் பாதுகாப்போம்... வாழ்நாள் முழுவதும் செவித்திறனுடன் இருப்போம்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments