மரத்தின் வேர்களால் கட்டப்பட்ட அதிசய பாலங்கள்
மேகாலயாவில் மரத்தின் வேர்களால் உருவாக்கப்பட்ட பாலங்கள் உள்ளன.
மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்தை கடக்கும் போது தனக்கு எதிரே தடையாக இருக்கும் ஆறு, கடல், ஓடை உள்ளிட்ட இடங்களை எளிதாக கடப்பதற்கு உருவாக்கப்பட்டவை தான் பாலங்கள். அறிவியலின் துணை கொண்டு இன்றைய காலத்தில் பல்வேறு வியப்பூட்டும் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் அந்த பாலங்கள் அனைத்தும் செயற்கையான பொருட்களை கொண்டே பெரும்பாலும் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆனால் இவற்றிற்கு மாறாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், காண்போரை வியக்க வைக்கும் வகையில், முழுவதும் இயற்கையான முறையில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மரத்தின் வேர்களால் ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த அதிசய பாலத்தை மேகாலயாவில் வாழும் காசிஸ் மற்றும் ஸைந்தியா இன பழங்குடியின மக்கள் உருவாக்கி உள்ளனர்.
உலகில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் இடமான சிரபுஞ்ஜியை சுற்றி உள்ள காடுகளில் தான் இந்த வேர்ப்பாலங்கள் அமைந்துள்ளன. நொவீட் - ரிவாய் ஆகிய கிராமங்களுக்கு இடையே செல்லும் ஆற்றை கடக்க அங்கு வசித்து வரும் காசிஸ் மற்றும் ஸைந்தியா இன பழங்குடியின மக்களின் மூதாதையர்களால் கட்டப்பட்டதே இந்த வேர்ப்பாலம்.
இந்த பகுதிகளில் அதிகமாக வளரும் ஆலமர வகையை சேர்ந்த சீமைஆல் மரத்தின் வேர்களை கொண்டு அவர்கள் இந்த பாலங்களை முழுக்க கைகலாலேயே உருவாக்கி உள்ளனர்.
பாலம் அமைக்க வேண்டிய பகுதியில் ஆற்றின் ஒரு கறையிலிருந்து மறு கறைக்கு மூங்கில் மற்றும் மரக்கட்டைகளின் உதவியுடன் சீமைஆல் மரத்தின் வேர்களை செலுத்துவார்கள், அப்படி செலுத்தப்பட்ட வேர்கள் மண்ணை அடைந்து 10 அல்லது 15 ஆண்டுகள் கழித்து அந்த வேர்கள் பெரிதாக வளர்ந்து மனிதன் நடக்க ஏதுவான வகையில் ஒரு வலிமையான பாலமாக மாறும். இந்த மரத்தின் வேர்கள் மிகவும் உறுதியானதாக இருப்பதால் பாலத்தின் ஆயுள் பல ஆண்டுகள் நீடித்தும் இருக்கும்.
இந்த பகுதியை சுற்றி மொத்தம் 11 வேர்ப்பாலங்கள் உள்ளன. சில பாலங்கள் ஒற்றை பாலங்களாகவும், இன்னும் சில பாலங்கள் இரண்டு அடுக்கு பாலங்களாகவும் உள்ளன. மேலும் இவை 50 பேரின் எடையை தாங்கக்கூடியதாவும், சுமார் 30 மீட்டர் நீளத்துடனும் உள்ளன.
இயற்கையை கொண்டு மனிதன் தன் படைப்பாற்றலால் உருவாக்கிய இந்த அழகிய பாலம் தற்போது மேகாலயாவின் சுற்றுலா அடையாளமாக மாறியுள்ளது. இதனால் இந்த அதிசய பாலங்களை காண தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாவாசிகள் இங்கு வருகின்றனர்.
காசி மற்றும் ஸைந்தியா பழங்குடியின மக்கள் இந்த வேர்ப்பாலங்களை எந்த காலத்திலிருந்து பயன்படுத்த தொடங்கினார்கள் என்ற சரியான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் இந்த பாலங்களில் உள்ள வேர்களின் உறுதியை கணக்கிட்டு பார்க்கும் போது சில பாலங்கள் நூறு ஆண்டுகள் பழமையாகவும், இன்னும் சில பாலங்கள் 500 பழமையானதாவும் உள்ளன.
மேலும் சிரபுஞ்ஜியில் மட்டுமின்றி மேகாலயாவின் அண்டை மாநிலமான நாகாலாந்தின் சில பகுதிகளிலும், இந்தோனேசியா நாட்டின் ஜாவா, சுமத்ரா ஆகிய தீவுகளிலும் இது போன்ற வேர்ப்பாலங்கள் சில காணப்படுகின்றன. ஆனாலும் சிரபுஞ்ஜியில் உள்ள வேர்ப்பாலங்கள் தனித்தன்மையுடன் இருப்பதால் இந்த பாலங்கள் மக்களை அதிகம் ஈர்க்கின்றன. இயற்கை நமக்கு தந்த இந்த பசுமையான சூழலை எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பதன் மூலம் நாமும் நம்முடைய அடுத்த தலைமுறை சமுதாயமும் மகிழ்வுடன் பாதுகாப்பாக வாழலாம்.
Comments