போக்குவரத்து போலீசாருக்கு ஸ்மார்ட் பைக்குகளை வழங்கினார் காவல் ஆணையர்
சென்னை போக்குவரத்து போலீசாருக்கு, ஸ்மார்ட் இருசக்கர வாகனங்கள் மற்றும் மோர் வழங்கும் திட்டத்தை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.
தேனாம்பேட்டையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஒவ்வொரு 2 சக்கர வாகனமும் இரண்டரை லட்ச ரூபாய் என்ற வகையில் பனிரெண்டரை லட்ச ரூபாய் மதிப்பில், 5 ஸ்மார்ட் ரோந்து இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.
வழக்கமான சைரன், ஒலிபெருக்கி வசதியுடன், தலைகவசத்துடன் கூடிய மைக் வசதியும் இதில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தலைக்கவசம் அணிந்த நிலையிலேயே போலீசார் உரையாடலில் ஈடுபட்டு, பாதுகாப்பு பணியை மேற்கொள்ளமுடியும்.
போக்குவரத்து போலீசாருக்கு நடப்பாண்டிற்கான கோடைக்கால மோர் வழங்கும் திட்டமும் தொடங்கிவைக்கப்பட்டது. சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பில், 122 நாட்களுக்கு மோர் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தடுக்க காவல்துறையினர் உறுதுணையாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Comments