தாமிரபரணி ஆற்றை வரைபடங்களில் தான் காண நேரிடும் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

0 1862

வருங்கால சந்ததியினருக்கு பாதுகாத்து வழங்க தவறினால் தாமிரபரணி ஆற்றை  வரைபடங்களில் தான் காண்பிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி, சுமார் 125 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் அருகே கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆற்று நீரால், தூத்துக்குடி , நெல்லை மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆனால் சில பகுதிகளில் தொழிற்சாலைக் கழிவு நீர் கலப்பதால், தாமிரபரணி ஆறு முழுவதுமாக மாசடைந்துள்ளதாகக் கூறி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், நவீன இயந்திரங்கள் மூலம் கழிவு நீரை மறுசுழற்சி செய்யவும், தாமிரபரணி கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிடுமாறு மனுதாரர் கேட்டிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நெல்லை மாவட்ட பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வழக்கறிஞரின் கையொப்பம், பெயர் உள்ளிட்டவை இல்லை.

இதையடுத்து, அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "தாமிரபரணி ஆற்றை வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டும். தவறினால் அதை வரைபடங்களில் தான் காண்பிக்க நேரிடும்" என குறிப்பிட்டனர். இந்த வழக்கினை மிகவும் முக்கியமானதாக நீதிமன்றம் கருதுவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், நெல்லை மாநகராட்சி ஆணையரை வழக்கில் சேர்த்து உத்தரவிட்டனர்.

தாமிரபரணி ஆற்றில் 969 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அகற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நீதிமன்றம் எளிதாக கடந்து செல்லாது. அடிக்கடி கள ஆய்வுகளையும் மேற்கொள்ளும். ஆகவே தாமிரபரணி ஆற்றில் எங்கெங்கு கழிவுநீர் கலக்கிறது? எங்கெங்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன? அவற்றை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள், நெல்லை மாநகராட்சி ஆணையர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை மார்ச் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments