அப்பாச்சி ரக ஹெலிகாப்டருக்கு இணையாக புதிய ஹெலிகாப்டர் தயாரிக்க முடிவு
அமெரிக்காவின் அதிநவீன ஹெலிகாப்டரான அப்பாச்சிக்கு இணையான ஹெலிகாப்டரைத் தயாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆர்.மாதவன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ‘அப்பாச்சி’ ரக ஹெலிகாப்டருக்கு நிகராக 10 டன் முதல் 12 டன் வரை தளவாடங்களை சுமந்து செல்லும் வகையில் புதிய ஹெலிகாப்டரை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
அந்த ஹெலிகாப்டரை வடிவமைக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டதாகக் கூறிய அவர், முன்மாதிரியாக ஒரு ஹெலிகாப்டரை தயாரிப்பதற்கு 9 ஆயிரத்து 600 கோடி ரூபாய் தேவைப்படும் என்று தெரிவித்தார். மத்திய அரசு இந்த ஆண்டில் ஒப்புதல் அளித்தால், வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் முதல் ஹெலிகாப்டர் தயாராகிவிடும் என்றும் மாதவன் குறிப்பிட்டார்.
மேலும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலமாக, எதிர்காலத்தில் முப்படைகளுக்கும் 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டர்களை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையிருக்காது என்றும் அவர் கூறினார்.
Comments