டெல்லி கலவரம் தொடர்பாக 254 வழக்குகள் பதிவு... 900க்கும் மேற்பட்டோர் கைது

0 1480

டெல்லி வடகிழக்குப் பகுதியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக பதியப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கிடையே கடந்த வாரம் நடந்த மோதலில், 46 பேர் உயிரிழந்துள்ளனர். 

கல்வீச்சு, துப்பாக்கிச் சூடு, தீவைப்பு, அடிதடி எனப் பல்வேறு வன்முறைகளால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டன. வன்முறையில் காயமடைந்த நானூற்றுக்கு மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குரு தேஜ் பகதூர் மருத்துவமனையில் 38 உடல்களும், லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் 3 உடல்களும், ஜக் பர்வேஸ் சந்தர் மருத்துவமனையில் ஒருவரின் உடலும் கூறாய்வு செய்யப்பட்டன. 

இந்நிலையில் வன்முறையில் கொல்லப்பட்டுக் கண்டெடுக்கப்பட்ட 4 பேரின் உடல்கள் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் இன்று கூறாய்வு செய்யப்படுகின்றன. இத்துடன் சேர்த்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த வன்முறை தொடர்பான வழக்குகளை, இரண்டு சிறப்பு புலனாய்வு குழுக்கள் விசாரணை செய்து வருகின்றன.

இதுதொடர்பாக, 903 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக 41 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும், கடந்த 4 நாட்களில் வன்முறை தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு எந்த அழைப்புகளும் வரவில்லை என்றும், வன்முறை நிகழ்ந்த பகுதிகள் தற்போது முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments