சாதிக்கத் துடிக்கும் வீரர்.. சோதித்துப் பார்க்கும் வறுமை..!
பாரா ஜூடோ எனப்படும் பார்வைக் குறைபாடு கொண்டவர்களுக்கான போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர், வறுமை காரணமாக ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு செல்ல வழியின்றி தவித்து வருவதாகக் தெரிவித்துள்ளார்.
சோழவரம் ஊராட்சிக்கு உட்பட்ட சோழிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் 85 விழுக்காடு பார்வைக் குறைபாட்டுடன் பிறந்தவர். குடும்ப வறுமை காரணமாக 10ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் போன மனோகரனுக்கு நண்பர்கள் மூலம் அறிமுகமான ஜூடோ கலை மீது ஆர்வம் ஏற்பட்டது.
கூலி வேலைக்குச் சென்று வந்த மனோகரன், தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பி, ஜூடோ கலையை முறைப்படி கற்கத் தொடங்கினார். திருவள்ளூர் மாவட்டத்தில் பாரா ஜுடோவுக்கான பயிற்சிகள் இல்லாத நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அளிக்கப்பட்டு வந்த பயிற்சி வகுப்புகளில் கற்றுத் தேர்ந்தார். ஆங்காங்கே நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.
தேசிய அளவிலான போட்டிகளில் 7 தங்கம் உள்பட வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ள மனோகரன், கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற போட்டி ஒன்றிலும் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஏழை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கற்றுத் தரும் மனோகரனிடம் தனியார் பள்ளி மாணவர்கள் சிலரும் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் சொற்ப கட்டணத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருவதாக கூறுகிறார் மனோகரன்.
இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் பிரிட்டனில் நடைபெற உள்ளன. இதில் கலந்துகொள்ள யாராவது உதவி செய்தால் நிச்சயம் சாம்பியன்ஷிப் வெல்ல முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் மனோகரன்.
மனோகரனின் கனவு நிறைவேற வேண்டும் என்பது அவரின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல. உடல் குறைபாட்டை பெரிதெனக் கொள்ளாது, வெற்றியை நோக்கி நம்பிக்கையோடு நடைபோடும் அத்தனை பேரின் எதிர்பார்ப்புமே..
Comments