துப்பறிவாளர்களாக மாறிய விவசாயிகள்..!
கரூர் அருகே விவசாய நிலங்களில் சாயப்பட்டறை திடக்கழிவுகளை கொட்டி வந்தவர்களை விவசாயிகளே ஒன்றிணைந்து கண்டுபிடித்து மடக்கி மன்னிப்புக் கேட்க வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கரூர் தென்னிலை பகுதியைச் சுற்றி ஆயிரக்கணக்கில் விவசாய நிலங்கள் உள்ளன. நொய்யலாற்றில் சாயக்கழிவுகள் கலந்து வரத் தொடங்கிய நாட்கள் முதலே இங்கு பெருமளவு விவசாயம் பொய்த்து, நிலத்தடி நீர் முற்றிலும் பாழாகி, குடிக்கக் கூட தகுதியற்றதாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, அண்மைக்காலமாக தென்னிலை சுற்றுவட்டாரப் பகுதி விவசாய நிலங்களில் சாயப்பட்டறை திடக்கழிவுகளை மர்ம நபர்கள் கொண்டுவந்து கொட்டிச் செல்வது தொடர் கதையாகியுள்ளது.
கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும் அந்த கழிவுகள், மழைக் காலங்களில் கரைந்து நிலத்தடியில் கலந்து மேலும் பாதிப்பை ஏற்படுத்தி வந்துள்ளன. கழிவுகளை அங்கு கொண்டு வந்து கொட்டுபவர்கள் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
இதனையடுத்து தாங்களே அந்தக் கயவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என முடிவெடுத்த விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினர். அடுத்த சில தினங்களில் இரவோடு இரவாக வந்து திருட்டுத்தனமாக திடக்கழிவுகளை அங்கே கொட்டிச் சென்ற லாரிகளை கண்டுபிடித்தனர்.
போலீசார் உதவியுடன் பதிவு எண்களைக் கொண்டு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களான செந்தில் மற்றும் ராஜமணிகண்டன் ஆகியோரை மடக்கினர். இவர்களுக்கு இடைத்தரர்களாக செயல்பட்டதாகக் கூறப்படும் ராதாகிருஷ்ணன் கொக்கிராஜா ஆகியோரும் பிடிபட்டனர்.
தென்னிலை காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட லாரி உரிமையாளர்கள் இருவரிடமும் நடத்திய விசாரணையில் பவானி பகுதியில் இயங்கி வரும் கவிதா டையிங் என்ற சாயப்பட்டறையில் இருந்து அந்தக் கழிவுகள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.
விவசாயிகளின் ஆவேசத்தால் அரண்டுபோன லாரி உரிமையாளர்கள் இருவரும், இனி அந்தத் தவறை செய்ய மாட்டோம் என்றும் வழக்கு எதுவும் பதிய வேண்டாம் என்றும் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்புக் கோரினர்.
அதனைத் தொடர்ந்து அங்கு கொட்டப்பட்டிருந்த கழிவுகளை அவர்களது லாரியிலேயே ஏற்றி, கவிதா டையிங் நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பினர். லாரிகளின் பின்னாலேயே பவானி வரை காரில் சென்று லாரிகளை அந்த நிறுவனத்துக்குள் அனுப்பிய பிறகே விவசாயிகள் ஊர் திரும்பினர்.
தங்கள் ஊரையும் விவசாய நிலங்களையும் பாதுகாக்க ஒற்றுமையாக இணைந்து விவசாயிகள் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
Comments