மத நல்லிணக்கத்திற்கு எதிரான வதந்திகளை நம்ப வேண்டாம் என முதலமைச்சர் பேச்சு..
மத நல்லிணக்கத்திற்கு எதிரான வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிறுபான்மை மக்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் 345 கோடி ரூபாயிலும், விருதுநகரில் 380 கோடி ரூபாயிலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே அமைக்கப்பட உள்ள மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ஒரே ஆண்டில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்ததாகவும், இது தனக்கு தனிப்பட்ட ரீதியில் கிடைத்த வெற்றியென்றும் கூறினார்.
புதிய கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 1,650 இடங்களுக்கும் சேர்த்து 2021-22ம் கல்வியாண்டில் சேர்க்கை நடைபெறும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.
இந்தியாவிலேயே அமைதி பூங்காவாக திகழும் மாநிலம் தமிழ்நாடு என்றும், சிறுபான்மையின மக்களுக்கு அரணாகவும் செயல்படுகின்ற அரசு தமிழக அரசு என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து, விருதுநகரில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பட்டாசு விற்பனை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்க துணை நின்றதாக சுட்டிக்காட்டிய அவர், விரைவில் சிவகாசி மாநகராட்சியாக உதயமாகும்
என அறிவித்தார்.
இன்னும் 5 ஆண்டுகளுக்குள் காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்தார். இரு நிகழ்ச்சிகளிலும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள், திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
Comments