வேதிப்பொருள் கிடங்கில் தீ... 100 கோடி ரூபாய் இழப்பு...

0 957

சென்னை மாதவரத்தில் வேதிப்பொருள் கிடங்கில் ஏற்பட்ட தீ, இருநூற்றுக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்களின் 17மணி நேரத் தொடர் முயற்சிக்குப் பின் முழுவதுமாக அணைக்கப்பட்டது. விபத்துக்குள்ளான கிடங்கை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மாதவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜி.ஆர்.ஆர். லாஜிஸ்டிக்ஸ் கஸ்டம் வேர்ஹவுஸ் என்கிற கிடங்கில் மருந்து தயாரிக்கப் பயன்படும் டெட்ரா ஹைட்ரோ கார்பன், டை மெத்தில் சல்பாக்சைடு உள்ளிட்ட வேதிப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்தக் கிடங்கில் நேற்று மாலை 3 மணி அளவில் மின்கசிவு காரணமாகத் திடீரெனத் தீப் பற்றியது. கிடங்கு முழுவதும் தீ பரவியதால் தகவல் அறிந்து மாதவரம், மணலி, பெரம்பூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 25 தீயணைப்பு வாகனங்கள், 20க்கு மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, 200க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீ அருகிலிருந்த 3 குடோன்களுக்கும் பரவிக் கரும் புகையுடன் பல அடி உயரத்துக்குக் கொழுந்துவிட்டு எரிந்ததால், அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இதையடுத்துத் தீயணைக்கும் பணியில் 3 ஏர் லிப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.

மாலையில் தொடங்கி நள்ளிரவு வரை இடைவிடாத போராட்டத்துக்குப் பின் இரவு ஒருமணிக்கு 80 விழுக்காடு தீ கட்டுப்படுத்தப்பட்டது. அதன்பின் தீயணைப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. காலையில் மீண்டும் தீயணைப்புப் பணிகள் தொடங்கி 9 மணிக்குள் தீ முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

தீ முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்பட்டாலும் கிடங்கில் இருந்த வேதிப்பொருட்களில் இருந்து தொடர்ந்து புகை எழும்பி வருகிறது. இந்தப் பயங்கரத் தீவிபத்தில் வேதிப்பொருட்கள், கிடங்கில் உள்ள கட்டமைப்புகள் என மொத்தம் நூறு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

விபத்தின் காரணமாக உறுதித்தன்மை குறைந்த கிடங்கை இடிக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் 5 ஜே.சி.பி. வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

ஜேசிபி எந்திரம் மூலம் கிடங்கின் சுவர்கள் இடிக்கப்பட்டதையடுத்து தீப்பற்றிய வேதிப்பொருள்களால் மூண்ட புகை விரைந்து வெளியேற்றப்பட்டது. விபத்து ஏற்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அலுவலர்கள், காற்றில் மாசுபாட்டின் அளவு இயல்பு நிலையில் உள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளனர். 3 நாட்களுக்குத் தொடர்ந்து பற்றி எரியக் கூடிய அளவுக்கு இது பெரிய தீ விபத்து தான் என்றாலும், சுழற்சி முறையில் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட வீரர்கள் பணியாற்றியதால் 17 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டதாகத் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments