தலிபானுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம்... இந்தியா வரவேற்பு..!
அமெரிக்காவிற்கும், தாலிபான்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது அமைதியை உண்டாக்க வரலாறு ஏற்படுத்திக் கொடுத்த அற்புதமான வாய்ப்பு என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமைதி உடன்படிக்கை, அனைத்து மக்களுக்கான வளர்ச்சியை நல்கும் என இந்தியா வரவேற்றுள்ளது.
கடந்த 2001-ஆம் ஆண்டின் நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட அல்-காய்தா தலைவர் பின்லேடனுக்கு, அப்போது ஆப்கானிஸ்தானில் ஆட்சி செலுத்தி வந்த தலிபான்கள் அடைக்கலம் அளித்ததால்தான் அந்த நாட்டின் மீது அமெரிக்கா படையெடுத்தது.
பின் இது உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான பல கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் நீடித்த அமைதியை ஏற்படுவதற்கு வகை செய்யும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் தலிபான் அமைப்பும் சனிக்கிழமை கையெழுத்திட்டன.
அமெரிக்க, தாலிபான்கள் இடையேயான அமைதி ஒப்பந்த நிகழ்வில் கத்தாருக்கான இந்தியத் தூதர் எஸ்.குமரன் பங்கேற்றார். தோஹாவில் கையெழுத்தான அந்த ஒப்பந்தத்தில், ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினரை இன்னும் 14 மாதங்களில் முழுமையாக விலக்கிக் கொள்ள அமெரிக்காவும், அல்-காய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்ள தலிபான் அமைப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால், 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நீடித்து வரும் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரக்கூடும்.
இதனிடையே, ஆப்கானிஸ்தானுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் அமைதிக்கான வரலாற்று வாய்ப்பு என வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
நீண்டகால போர்களை முடிவுக்குக் கொண்டுவந்து அமெரிக்க வீரர்கள் தாயகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என்ற தனது தேர்தல் வாக்குறுதி நிறைவேறும் நாள் வெகுதொலைவில் இல்லை என டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தி வெளியிட்ட இந்திய வெளியுறவுத்துறை, ஆப்கன் வளர்ச்சிக்கும், அந்நாட்டில் வசிக்கும் அனைத்து பிரிவினரின் நலன்களை பாதுகாப்பதற்கும் இந்திய அரசு தொடர்ந்து அனைத்து உதவிகளையும் செய்யும் என கூறியுள்ளது.
Comments