கொரானா மரணம் 3000 ஆயிரத்தை நெருங்குகிறது

0 2383

கொரானா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் சீனாவுக்கு உச்சகட்ட எச்சரிக்கையை உலக சுகாதார மையம் விடுத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் கொரானாவால் முதல் மரணம் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் வூகான் நகரில் இருந்து பரவி உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலான கொரானா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 977 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 86 ஆயிரத்து 603 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7 ஆயிரத்து 569  பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றன.

ஆளற்ற அண்டார்க்டிகா தவிர ஆறு கண்டங்களிலும் அசுரவேகத்தில் பரவி வரும் கொரானாவை உலகின் மிக மோசமான அச்சுறுத்தல் என உலக சுகாதார மையம் குறிப்பிட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் சீனாவில் 35 பேர் கொரானாவால் உயிரிழந்துள்ளதாகவும், 573 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சீனாவுக்கு வெளியே கொரானாவால் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதில அதிகபட்சமாக ஈரானில் 43 பேர் பலியாகி உள்ளனர். அந்நாட்டில் 600 பேருக்கு நோய்த் தொற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடைய ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியில் அதிகபட்சமாக 29 பேரும் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனியில் புதிதாக 45 பேருக்கும், ஃபிரான்சில் 38 பேருக்கும் ஸ்பெயினில் 23 பேருக்கும் கொரானா தொற்றியுள்ளது. 

இந்த நிலையில் அமெரிக்காவில் 4 பேருக்கு கொரானா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 50 வயது கொண்ட பெண் ஒருவர் இந்த கிருமியின் தாக்கத்தில் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், 22 பேர் வரை கொரானா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகம் எழுப்பிய அவர், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளாகவும், எது நடந்தாலும் விழிப்புடன் பணியாற்ற தயார் நிலையில் தாங்கள் இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தென்கொரியா

தென்கொரியாவில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை கடந்துள்ளது. வைரஸ் தாக்குதலால் இதுவரை அங்கு 17 பேர் உயிரிழந்த நிலையில், சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான நபர்கள் இங்கு கொரானா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் புதியதாக 813 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,150 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, மோசமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் வெளியில் வருவதை குறைத்துக் கொள்ளுமாறும், முடிந்தவரை வெளிநபர்கள் உடனான தொடர்பை தவிர்க்குமாறும் அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments