டெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று முதல் இழப்பீடு - முதல்வர் கெஜ்ரிவால்
டெல்லியில் கலவரம் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் திரும்பவேண்டும் என்றும், இழப்பீட்டுத் தொகை இன்று முதல் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு டெல்லியில், சிஏஏ ஆதரவு, எதிர்ப்பாளர்கள் இடையேயான போராட்டத்தின்போது வெடித்த கலவரத்தில் 42 பேர் கொல்லப்பட்டனர். கலவரம் மூண்ட பகுதிகளில், தற்போது அமைதி திரும்பி வருகிறது. பொது மக்களில் பெரும்பாலானோர் வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டதால் அங்கு மயான அமைதி நிலவுகிறது. நிலைமை கட்டுக்குள் வந்தாலும், போலீசார், துணை ராணுவத்தினர் மற்றும் அதிரடிப் படை வீரர்கள் முக்கிய சந்திப்புகளில் குவிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், வேறு எங்கும் கலவரம் நடந்ததாக பதிவுகள் இல்லை என்றும் குறிப்பிட்டார். கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணி இன்று முதல் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் கலவரம் பாதிக்கப்பட்ட மாஜ்புர், ஜப்ராபாத், பாபர்பூர் உள்ளிட்ட இடங்களில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி உள்ளனர். வன்முறைச் சம்பவங்கள் எங்கும் பதிவாகாததால் அப்பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
டெல்லி வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 167 வழக்குகளும், ஆயுதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 36 வழக்குகளும் பதியப்பட்டுள்ளதோடு, 885 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பதிவுகள் வெளியிட்டதாக, 13 முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
கலவரத்தைத் தொடர்ந்து டெல்லியின் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீவத்ஸவா, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் வராமல் தடுக்கவும், நல்லிணக்கத்தை மீட்டெடுக்கவும், ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசி வருவதாகத் தெரிவித்தார்.
Comments