சென்னை மாதவரத்தில் ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து..
சென்னை - மாதவரம் ரசாயன குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 100 கோடி ரூபாய் வரை, சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
மாதவரம் ரவுண்டானா அருகே 120 கோடி ரூபாய் முதலீட்டில், துவக்கப்பட்டு, இயங்கி வரும் ஜி.ஆர்.ஆர். லாஜிஸ்டிக்ஸ் கஸ்டம் வேர் ஹவுஸ் என்ற இந்த கெமிக்கல் குடோனில், மாலை 3 மணி அளவில் திடீரென தீ பிடித்தது. பல மணி நேரமாக, கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவர, தீயணைப்பு வீரர்கள் 500 பேர் கடுமையாக போராடினர்.
இங்கு மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படும் டெட்ரோ ஹைட்ரோ என்ற ரசாயன பேரல்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த தீ விபத்தில் ரசாயன பேரல்கள் வெடித்து சிதறியதால், விஷத்தன்மை பரவும் என யாரும் அச்சப்படப்பட வேண்டாமென தீயணைப்புத்துறை டிஜிபி - சைலேந்திரபாபு கேட்டுக்கொண்டார்.
அதேநேரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகே வசிக்கும் மக்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். கொழுந்து விட்டு எரிந்த தீ, அருகிலுள்ள பிளாஸ்டிக் குடோன் மற்றும் ஆயில் குடோன், அலுமினிய குடோன்கள், அருகே இருந்த சில வாகனங்களுக்கும் பரவியது. கரும் புகையுடன் பல அடி உயரத்துக்கு தீ எரிந்ததால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.
மின்கசிவு காரணமாக, இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Comments