8 மாத குழந்தை கடத்தல் : அதிரடியாக களமிறங்கிய போலீஸால் 24 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்பு

0 2131

சென்னையில் நள்ளிரவில் கடத்தப்பட்ட 8 மாத பெண் குழந்தை, 24 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளது. சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் விசாரணை நடத்தி, குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய நபர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கும்பகோணத்தை சேர்ந்த 22 வயது இளம் பெண் சினேகா என்பவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டில் கோபித்துக்கொண்டு வெளியேறி, தனது 8 மாத பெண் குழந்தையுடன் சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை விழித்த போது, தனது பக்கத்தில் படுக்க வைக்கப்பட்டிருந்த
8 மாத பெண் குழந்தை காணவில்லை என்றதும் அதிர்ச்சி அடைந்து, போலீசில் புகார் கொடுத்தார்.

அந்த பகுதியில் பதிவாகி இருந்த சுமார் 150 சிசிடிவி காட்சிகளை துரைப்பாக்கம் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். பெசன்ட்நகரில் இருந்து நெசப்பாக்கம் வரை 3 இடங்களில் கடத்தல் கும்பல் ஆட்டோவை மாற்றி பயணித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் துரிதமாக செயல்பட்டு, 24 மணி நேரத்திற்குள், குழந்தையை, பத்திரமாக மீட்டதாக அடையாறு துணை ஆணையர் பகலவன் தெரிவித்தார்.

மாயமானதால், தவித்த தாய் சினேகா, மீண்டும் குழந்தை கிடைத்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டார். குழந்தை கடத்தல் தொடர்பாக, காரைக்குடி மேரி, ரூபன், திருப்பதியம்மாள், பால வெங்கம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2 லட்சம் ரூபாய் கொடுத்து, இந்த கடத்தல் கும்பலிடம் இருந்து இந்த குழந்தையை வாங்கியிருந்த புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் போலீசில் சிக்கினார்.

மணிகண்டனின் மூத்த சகோதரிக்கு திருமணம் ஆகி, குழந்தை இல்லாததால், கடத்தல் குழந்தையை வாங்கியிருந்தது, போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. பிடிபட்ட இந்த கும்பல், இதுபோல வேறு சில பகுதிகளிலும் குழந்தைகளை கடத்தி இருப்பார்களோ என சந்தேகம் எழுந்துள்ளதால், போலீசார், விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

குழந்தை இல்லாத தம்பதியர், உரிய நடைமுறை - வழிமுறைகள் மூலம் சட்டப்பூர்வமாக தாங்கள் விரும்பும் குழந்தைகளை, தத்தெடுக்க முடியும். இதை விட்டு, விட்டு இதுபோன்ற கடத்தல் கும்பலிடம் இருந்து, சட்ட விரோதமாக குழந்தைகளை விலைக்கு வாங்கினால், போலீசாரின் இரும்பு பிடியில் இருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments